Author: நாமக்கல் சிபி
•7/25/2007 11:38:00 am
பகுதி - 2

8.30 மணி ராஜகோபால் பஸ்ஸைப் பிடித்தாக வேண்டும். இப்போதே மணி 8 ஆகியிருந்தது. அவசரமாக இட்லியை விழுங்கிக் கொண்டிருந்தேன். பேருந்து நிலையத்தை அடைய எப்படியும் 15 நிமிடம் நடந்தாக வேண்டும்.

"இன்னும் ஒரே ஒரு இட்லியாவது வெச்சிக்கோடா" என்ற அம்மாவின் குரலைப் பொருட்படுத்தாது, தட்டை வாஷ் பேசினில் போட்டுக் கை கழுவிக் கொண்டு ஷூவை மாட்டலானேன்.

பேருந்து நிலையத்திற்குள் நுழையும்போதே விளம்பர காண்ட்ராக்டரின் ஒலி பெருக்கி தனது வழக்கமான
"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே" என்ற பாடலுடன் தனது பணியைத் துவங்கி இருந்தது.

பாடல் முடிவதற்குள் பேருந்து வந்துவிடும். வழக்கமாக இது நடப்பதுதான். 8.30 மணிக்கு வந்த வேகத்தில் புறப்படும் பேருந்து சரியாக 9.00 மணிக்குள் வண்டி கேட் ஸ்டாப்பிங்கை அடைந்துவிடும்.
இறங்கி ஓட்டமும் நடையுமாக வகுப்பிற்குள் சென்று அமர்வதற்குள் முதல் பீரியட் ஆசிரியர் உள்ளே வந்து விடுவார்.

அடித்து பிடித்து பேருந்திற்குள் ஏறியதும் வழக்கம் போல ஜூனியர் மாணவன் வடிவேலு சீட் போட்டு வைத்திருந்தான்.

வகுப்பிற்குள் நுழையும் முன்னரே
"டேய் சக்தி, பிரின்ஸி ரூமுக்கு வரச் சொல்லி இருக்காங்களாம், போய்ப் பார்த்துட்டு வந்துடு, நேத்து என்ன பண்ணினியோ தெரியலை"

நமட்டுச் சிரிப்புடன் சொன்னான் பாலன்.
கேட்டதும் வியப்பாக இருந்தது.

"அட்டெண்டன்ஸ்லாம் 96%க்கு மேல வெச்சிருக்கேனே" என்ற யோசனையுடன் பிரின்ஸிபால் அறை நோக்கி நடந்தேன்.

அங்கே ஏற்கனவே மற்ற டிபார்ட்மெண்ட்களில் இருந்தும் கூட இன்னும் சில மாணவர்கள் நின்றிருந்தனர். "அட! எல்லாருமே நல்லா படிக்குற பசங்கதான், அப்போ பிரச்சினை ஏதும் இருக்ககது" என்று எனக்கு நானே சமாதானம் ஆனேன்.

எனது டிபார்ட்மெண்ட் சிவாவும் அங்கேதான் நின்றிருந்தான்.
"மச்சான்! பெரிசா லெக்சரர் கொடுக்கப் போறாருன்னு நினைக்கிறேன்"

சிறிது நேரத்தில் காத்துக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் உள்ளே வரச் சொன்னதாக பியூன் வந்து சொன்னார்.

உள்ளே சென்று அவரது டேபிளைச் சுற்றி நின்றோம்.

எல்லோரும் வந்தாயிற்றா எண்று உறுதிப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார் பிரின்ஸிபால்.
"உங்களையெல்லாம் எதுக்கு வரச் சொல்லி இருக்கேன் தெரியுமா? வருஷா வருஷம் நம்ம பாலிடெக்னிக்கிலே டிப்ளமோ படிக்குற பசங்க குறைந்த பட்சம் பத்து பேராவாது நல்ல பெர்சண்டேஜோட வெளிய போயி, கவர்மெண்ட் கோட்டாவிலயே இன்ஜினியரிங்க் காலெஜ்ல சீட் வாங்குறாங்க. அதுவும் கவர்மெண்ட் காலெஜ்லயே ஃபுல் மெரிட்ல போறாங்க!

அந்த வகைல உங்க பெர்பர்மான்ஸ் எல்லாம் நாங்க பார்த்துகிட்டுதான் இருக்கோம்! இது வரைக்கும் நீங்க எல்லாருமே 90 க்கு மேல பெர்சண்டெஜ் வெச்சிருக்கீங்க! இந்த செமஸ்டர்தான் கடைசி செமஸ்டரும் கூட! நீங்க இப்பதான் கவனமா இருக்கணும்!

கொஞ்சம் கூட கவனத்தைச் சிதறவிடாம இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து படிச்சீங்கன்னா நீங்க 95 பர்சண்டேஜ் கண்டிப்பா வாங்கிடலாம்!

அதுதான் நீங்க எங்களுக்கு செய்ய வேண்டியது! எங்களுக்கு மட்டுமில்லை! உங்களைக் கஷ்டப் பட்டு படிக்க வைக்குற உங்க பேரண்ட்ஸ்க்கும் நீங்க செய்ய வேண்டியது இதுதான்! மேல படிச்சி நல்ல வேலைல சேர்ந்து, நிறைய சம்பாதிச்சி கொடுப்பீங்கங்குறது அப்புறம்! இப்ப இருக்குற நிலைமைல மேற்கொண்டு இன்ஜினியரிங் காலேஜ் சேர்க்கணும்னா என்ன செலவாவுமோ, எவ்வளவு செலவாவுமோன்னு அவங்களைக் கவலைப் பட விடாம நீங்க எல்லாரும் மெரிட் கோட்டாவுல சேர்ந்து அவங்களுடைய பாரத்தைக் குறைக்கணும். அதுதான் முக்கியம்! என்ன புரிஞ்சிதா!

இதுதான் உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது. நீங்களும் நல்லா படிங்க! உங்க ஃபிரண்ட்ஸ்க்கும் சொல்லிக் கொடுத்து அவங்களையும் நல்ல மார்க்கோட பாஸ் செய்ய வையுங்க!

ஆல் த பெஸ்ட்!

நீங்க இப்ப போகலாம்"

ஒரே மூச்சில் பேசி முடித்து எங்களை வகுப்பிற்குச் செல்ல அனுமதித்தார்.

தொடரும்............................................................!
Author: நாமக்கல் சிபி
•7/22/2007 10:10:00 am
பகுதி 1

உள்ளங்கையில் துளசியை ஏந்தியவாறே வலம் வந்தோம்.

"ம்க்கும்" தொண்டையைக் கணைத்து என் இருப்பை நினைவூட்டினேன்.

"..."
என்ன என்று கேட்பது போல் தலை திருப்பினாள்.

"எதுனா பேசுறது! ஒண்ணுமே பேசாம போனா எப்படி?"

"கோயில் வந்தது சாமி கும்பிட, உன் கூட பேச இல்லை"

"அது சரி. அப்போ நான் வராம இருந்தா மேடம் ஏன் கோவிச்சிக்கணும்?"

"நீங்களும் கோயிலுக்கு வரணும். ஆனா பேசணும்னு அவசியம் இல்லை, அதான்!"

"அட!"

"சரி சரி! எல்லாரும் பார்க்குறாங்க! பிரசாதம் வாங்க வரிசைல நில்லு"

ஆளுக்கொரு புளியோதரை நிறைந்த தொண்ணையுடன் படிக்கட்டில் இறங்கினோம். ஏறத்தாழ அனைவரும் சென்றுவிட்டிருந்தனர் ஓரிருவரைத் தவிர.

"முண்டம், ஏண்டா லேட்டு?"

"என்னது முண்டமா?"

களுக்கென்னு சிரித்தாள்.

"பின்னே லேட்டா வந்தா ஏங்க மிஸ்டர் லேட்னு கேக்கணுமா?"

"அதுக்காக முண்டம்னு சொல்றதெல்லாம் ஓவர் சொல்லிட்டேன்"

"இதுக்கே இப்படின்னா...!"

"என்ன இதுக்கே இப்படியா? அப்போ இன்னும் என்னவெல்லாம்டி சொல்லுவே?"

"தோ பாரு! இந்த டீ போடுற வேலையேல்லாம் வேண்டாம்"

"பின்னே நீ மட்டும் முண்டம்னு சொல்லுவியா?"

"சரி! விடு! நீ பாட்டுக்கு உன் லேட்டா வந்தா என்ன அர்த்தம், நான் தேடிகிட்டே இருந்தேன் தெரியுமா?"

"ஓ! சாரிப்பா! அதான் வந்துட்டேன்ல! நேத்து கொஞ்சம் அசைன்மெண்ட்ஸ் அதிகம் குடுத்துட்டாங்க! ஃபைனல் இயர் வேற! அதான் எழுதி முடிக்கும்போது மணி 12.30 ஆயிடுச்சு! நல்லாத் தூங்கிட்டேன்"

"அப்போ நல்லாத் தூங்கலையா என் செல்லம்"

"இல்லை! ரேடியோல பாட்டைக் கேட்டவுடன் விழுந்தடிச்சிட்டு எழுந்து குளிச்சிட்டு ஓடியாந்தேன்"

"ம்ம், இப்போ கடைசி வருசம், முடிச்சதும் ஐயாவுக்கு என்ன திட்டமோ? வேலை தேடுறதுதான?"

"என்னது வேலையா" வெறும் டிப்ளமோ முடிச்சிட்டு வேலைக்குப் போனா, உன்னை வெச்சி குடும்பம் நடத்துற அளவுக்கெல்லாம் சம்பாதிக்க முடியாதும்மா! அடுத்து ஐயா எஞ்சினியரிங்க் காலேஜ்ல சேரப் போறேனாக்கும்"

"ஓ! இஞ்சினியரிங்க் காலேஜ் நம்ம ஊர்லே கிடையாதே! வேற ஊருக்குப் போயிடுவியா?"

"ஆமா! ஆனா மூணே மூணு வருஷம்தான்"

"மூணு வருஷமா? ஐய்யோ! எப்படிடா என்னை விட்டுட்டு இருக்கப் போறேன்னு இவ்ளோ கூலா சொல்லுறே? எனக்கு கேட்டவுடனே திக்குங்குது"

"வேற என்ன பண்ணுறது? நான் தூரமா போனாலும் என் மனசுக்குள்ளே நீ இருந்துகிட்டே இருப்பியாம். நான் உன் மனசுக்குள்ளே இருந்துகிட்டே இருப்பனாம், மூணு வருஷம் மூணே நிமிஷமா ஓடிடுமாம், இஞ்சினியரிங் முடிச்சதும் நல்ல வேலைல உக்காரணும். நம்ம கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கணும், நான் உன்னை மகாராணி மாதிரி வெச்சி காப்பாத்துவேனாம்"

"நிஜமாவா! வேற ஊருக்குப் போனதும் என்னை மறந்துட மாடியே"?

"சத்தியமா என் செல்லம்! என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குதுல்ல, நீ வேணா பாரேன் இந்த அரங்க நாதர் கோயில்ல வெச்சி சொல்லுறேன், நமக்கு இதே கோயில்ல வெச்சித்தான் கல்யாணம் தடபுடலா நடக்கும் பாரேன்"

அதே நேரம் கோவில் ஒலிபெருக்கியில்

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்சேவடி செவ்விதிருக் காப்பு."

என்று பாசுரங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

"பார்த்தியா! பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று பெரியாழ்வாரே நம்மை ஆசீர்வதிக்குறா மாதிரி இருக்குதுல்ல" என்றேன்.

சாந்தமான புன்னகையுடன் ஆமோதித்தாள்.

ஆயினும் அவள் கண்களில் கொஞ்சம் கவலை குடி கொண்டிருந்ததை கவனிக்கத் தவறவில்லை நான்.

தொடரும்......................................!

பகுதி - 3
Author: நாமக்கல் சிபி
•7/18/2007 11:24:00 am

"தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்; "

கோவில் ஒலிபெருக்கியில் கசிந்து கொண்டிருந்த திருப்பாவைப் பாடல், என்னை எழுப்பியது.
"அடச் சே! இவ்ளோ நேரம் ஆச்சே! நல்லாத் தூங்கிட்டேனோ"

அவசர அவசரமாய் போர்வையை உதறி எழுந்தேன். பிரஸ்ஸையும் பேஸ்டையும் கையிலெடுத்துக் கொண்டு டவலை எடுத்துத் தோளில் போடுக் கொண்டேன்.

இன்னிக்கு கோவிச்சிக்கப் போறா! எப்படி சமாளிக்கப் போறேனோ!

குளியல் முடித்து பேண்ட், சட்டை மாட்டி வேகமாக தெருவில் இறங்கினேன்.
"அம்மா! கதவைத் தாழ் போட்டுக்குங்க" உட்புறம் நோக்கிச் சொல்லிவிட்டு நடக்கத் துவங்கினேன்.

சில்லென்ற மார்கழிக் காற்று முகத்தில் அறைந்தது. இந்த மார்கழிப் பனியும், சில்லென்ன காற்றும் அனுபவித்து உணர வேண்டியது. சொல்லி உணர வைக்க முடியாது. அதுவும் விடிந்தும் விடியாத இந்த மார்கழியின் அதிகாலைப் பொழுது இருக்கிறதே! ஆஹா! சுகமோ சுகம்! வருடம்தோறும் மார்கழியாய் இருந்தால் என்ன?

கோயில் சென்று சேரும்போது கோவில் ஒலிபெருக்கி

"பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே"
என்று பாடிக் கொண்டிருந்தது.

இதைப் பாடிக்கொண்டிருக்கும் குரல்களில் அவள் குரலும் உண்டு!

பாம்பணையில் பள்ளி கொண்டவனைப் படிகளேறித் தரிசிக்க வேண்டும். வேக வேகமாய் படிகளில் பறந்தேன். அந்தக் குளிரிலும் நெற்றியில் சிறிது வேர்த்தது.

பஜனைக் குழுவை நெருங்கியதும் பாடலைப் பாடிக் கொண்டே சிலர் நிமிர்ந்தனர்.
அனைவருக்கும் பொதுவாய் ஒரு வணக்கம் போட்டுவிட்டு, இன்னும் திறக்காத பரந்தாமனின் கதவுகளை நோக்கியும் ஒரு கும்பிடு போடு விட்டு ஆண்கள் பகுதியில் சென்று அமர்ந்தேன்.

அடுத்த பாடல் ஆரம்பித்தது. எனது குரலும் குழுவினரோடு இணைந்தது.

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து
உன்பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து
நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உன்தன்னோடுஉற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

பாடலை உதடுகள் முணுமுணுத்தவாறே கண்கள் தேட ஆரம்பித்தன!

அதோ அழகிய சிற்ப வேலைப் பாடுகளோடு கூடிய அந்தத் தூணுக்கு அருகே,
ஊதா நிறத் தாவணியும், சற்று ஈரம் காயாத கேசத்தில் முடிந்தௌ வந்த மல்லிகைச் சரமுமாய்..

அட! அவளும் என்னைப் பார்த்துவிட்டாள். பாடலைப் பாடியவாறே ஒரு புன்னகை! யாரும் அறியா வண்ணம்! நானும் புன்னகைத்தேன்!

தொடரும்...........................................!

பகுதி 2

பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!