Author: நாமக்கல் சிபி
•8/14/2007 11:23:00 am
பகுதி 5

எப்படியோ கவுன்ஸிலிங், அட்மிஷன், ஹாஸ்டல் எல்லாம் முடிந்து இன்றுதான் முதல் நாள் வகுப்பு.
முதன் முதலாக ஒரு கல்லூரி வாழ்க்கை. ஒரு பெரிய பொறியியல் கல்லூரியில். அதுவும் சென்னை.

லேடரல் எண்ட்ரிதான்(நேரடியாக இரண்டாம் ஆண்டு). இருந்தாலும் முதல் நாள் வகுப்பில் கொஞ்டம் மிரட்சியாகத்தான் இருந்தது.

தாவணியிலும், சுடிதாரிலும் பார்த்த பெண்களை இங்கே வித விதமான உடைகளில் காண முடிந்தது.
மாணவர்களிடமும் ஒரு மாதிரி எதைப் பற்றியும் கவலை கொள்ளாதது போலவே சிகையும், ஒரு அசால்ட்டான பாவனையும் மிகுந்திருந்தது. ஆனாலும் ஒரு வித தெளிவு இருந்தது அவர்களிடம்.

வகுப்பிற்குள் நுழைந்ததும் மூன்றாவது வரிசையில் ஒரு இருக்கை காலி இருந்தது.

"இங்கே யாராச்சும் வறாங்களா?" தயக்கத்துடன் கேட்டேன்.

"நோப், யூ கேன் ஜஸ்ட் சீட் ஹியர், எனிவே ஆர் யூ லேட்டரல் எண்ட்ரி?"

"ஆமாம்"

"ஐயாம் ராஜ்" என்று கை நீட்டினான்.

"ஹாய், ஐ யாம் சக்தி" என்றேன்.

மணி 9.15 ஆகியிருந்தது. ஆசிரியர் வரும் நேரம்தான். வகுப்பிற்குள் சல சலவென சத்தம் எழுந்து கொண்டே இருந்தது.

"நம்ம பாலிடெக்னிக்கில்லெல்லாம் இந்நேரத்திற்கு எந்த சத்தமும் இருக்காதே, ஆசிரியர் வராவிட்டாலும் கூட" நினைத்துக் கொண்டேன்.

"மச்சி, இன்னிகு ஃபர்ஸ்ட் அவர் நம்ம தருமி கிளாஸ்டா!" என்று சொல்லிக் கொண்டே ஒரு மாணவன் எங்களைக் கடந்து சென்றான்.

"அது என்ன தருமி! பேர் வித்தியாசமா இருக்கே?" என்றேன்.

"ஹிஹி.. அதுவா அவரோட உண்மையான பேர் புரொபெசர் சாம். பசங்களை எப்போ பாரு கேள்வி கேட்டுகிட்டு இருப்பாரு. அதனால சீனியர் பசங்க அவருக்கு வெச்ச பேரு தருமி. அவருக்குக் கேள்வி கேக்க மட்டும்தான் தெரியுமாம்" என்றான் ராஜ்!

அதற்குள் புரபொஸர் வகுப்பிற்குள் நுழைந்தார். புதிய மாணவர்களின் பெயர்களை கேட்டு அறிமுகப் படுத்திக் கொண்டு வகுப்பைத் தொடங்கினார்.

"ம். ஏறத்தாழ இன்னும் ரெண்டு மாசத்துல செமஸ்டர் எக்ஸாம் வரப் போகுது. உங்கள்ள யாராருக்கெல்லாம் கோல்டு மெடல் வாங்குற எண்ணம் இருக்கு?" அனைவரையும் பார்த்துக் கேட்டார் சாம்.

"ஆரம்பிச்சிட்டாருடா" என்று ராஜ் சலித்துக் கொண்ட அதே நேரம் எனது வலது விலாப் பகுதியில் சுரீரென்ற வலியை உணர்ந்த நான் சட்டென முழங்கைய்யை உயர்த்தி குனிந்து பார்த்தேன்.

"வெரி குட்! இப்படிப்பட்ட ஸ்டூடண்ட்ஸைத்தான் நான் எதிர்பார்த்தேன். தம்பி யாருப்பா அது? எழுந்திருப்பா! உன் பேரென்ன?" என்று கேட்டுக் கொண்டிருந்தார் பேராசிரியர் சாம்.

மீண்டும் வகுப்பைக் கவனிக்க நிமிர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது. என்னை நோக்கித்தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது. பின்புற இருக்கையிலிருந்து மெல்லிய சிரிப்பொலி கேட்டது.


"சார் அதுவந்து..! நான் அதுக்காக கை தூக்கலை சார்!" என்று தயங்கித் தயங்கிச் சொன்னது அவர் காதுகளில் விழவே இல்லை. எழுந்து வேறு நின்றாயிற்று.

"குட்! அப்படித்தான் இருக்கணும்! உன் பேர் என்ன?" மீண்டும் கேட்டார்.

"சக்தி"

மீண்டும் விளக்கம் சொல்ல நினைத்தால் தொண்டையிலிருந்து வெறும் காற்று மட்டுமே வந்தது.

"லேட்டரல் எண்ட்ரிதான? டிப்ளமோல எவ்வளவு பெர்சண்டேஜ்?"

"97"

"குட்! அப்போ நீ காம்படீட் பண்ணலாம்! நீ கோல்டு மெடல் வாங்குவே! ஐ பிலீவ் இட்!" என்றார் ஒரு புன்னகையுடன்.

"என்னடா இது வம்பாப் போச்சே! பின்னாடி இருந்து எவனோ இடுப்புல குத்தி விட்டுட்டான்னு கை தூக்குனா இவரு இப்படி நினைச்சிகிட்டாறே! நினைச்சிக்கிட்டுமே! இப்ப என்ன ஆயிடுச்சு!" என்று எண்ணிக் கொண்டே அமைதியாக நின்றேன்.

"மச்சி! நந்தினி சரியா டென்ஷன் ஆயிட்டாடா! பாரேன் கோல்டு மெடல் போட்டிக்கு ஒருத்தன் போட்டிக்கு வந்துட்டான்னதும் கோவமா நகம் கடிக்குறதை!" என்ற பின்புற இருக்கையின் கிசுகிசுப்புக் குரல் கேட்டு அப்படியே வலது புறம் திரும்பினேன்.

தன் பெரு விரல் நகத்தைக் கடித்தவாறே கோபமுடன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி.

"அவள்தான் நந்தினியோ?"

"சபாஷ் சரியான போட்டி" மீண்டும் பின்புற இருக்கையிலிருந்து சற்று பலமாகவே வந்த குரல் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது.

தொடரும்....................................!
Author: நாமக்கல் சிபி
•8/08/2007 12:05:00 pm
பகுதி 4

அடுத்து வந்த இரண்டு மாதங்கள் போனதே தெரியவில்லை. பிரிய இருக்கிறோம் என்று கவலையுற்றே பிரியாமலே இருந்தோம். கவலைப் பட்டுக் கொள்வதற்கே சந்தித்தோம். மீண்டும் சந்தித்துக் கொள்வதற்காகவே பிரிந்தோம் அன்றைய பொழுது சாய்ந்ததும்.

தினந்தோறும் நேசத்தின் மழையின் நனைந்தேன். அவ்வப்பொழுது அவளின் கண்ணீர் மழையினிலும்!
ரிசல்சட் வந்த அன்று 97% மதிப்பெண் பெற்றதத அறிந்து என்னை விடவும் அதிகம் மகிழ்ந்தவளும் அவள்தான்! அதை விட அதிகமாய் அழுதவளும் அவள்தான்! அதிகப் படியான மதிப்பெண்கள் எங்களுக்கிடையில் தொலைவை அதிகமாக்கும் என எண்ணியிருந்தாள் போலும்.

"மண்டு! எவ்வளவு தொலைவு போனாலும் நான் உன்னோடதானடி இருப்பேன்?"

"எப்படி?" என்றாள் கண்களை அகல விரித்தபடி. ஒன்றும் தெரியாதவள் போல் நடிப்பதில் கில்லாடி.

"இப்படி" என்றேன்.சட்டென அவள் கை விரல்கள் பற்றி என் இதழோடு சேர்த்து ஒரு முத்தமிட்டேன்.

"ச்சீ! போடா! ஏன் இப்படி என் உசிரை வாங்குறே?" என்றாள்.

"அட! என் உசிரைத்தானடி நான் வா ங்குறேன்" என்றேன்.

"உன்கிட்டே பேசி ஜெயிக்க முடியாது" என்றாள்.

"ஆமாம்! என்கிட்டே பேசி ஜெயிக்க முடியாது" கண்சிமிட்டினேன்.

"போடா பொறுக்கி!" பொய்க்கோபம் காட்டினாள்.

இப்படித்தான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதும், ஒவ்வொரு விதமாய்.

சீண்டிப் பார்த்து சிதறிப் போனோம் . தீண்டிப் பார்த்து திக்குமுக்காடினோம்.

பரிகசித்துக் கொண்டோம். பரிதவித்துக் கொண்டோம்!

பங்குனித் தேர்த்திருவிழாக் கடைகளில் இன்னும் கூட்டம் இருந்தது.
மலைக் கோட்டைக் குளக்கரையில் வண்ண வண்ண பொம்மைகள், வளையல்கள், வீட்டு உபயோகச் சாமான்கள், அப்பளம், மிளகாய் பஜ்ஜி கடைகள்.. திருவிழா முடிந்த ஒரு மாதம் இன்னும் வியாபாரம் நடத்திக் கொண்டிருந்தன.

அவளை கடைக்கு அழைத்து வந்தேன்.

"வேணுங்கறதெல்லாம் வாங்கிக்க!"

"ஒண்ணும் வேணாம்டா எனக்கு"

எனக்குப் புரிந்தது.

நானே எனக்குப் பிடித்த வளையல்களை வாங்கி அவள் கைகளில் மாட்டினேன். அவள் மனசு நெகிழ்ந்தது. வளையல் சுலபமாய் நுழைந்தது!


எதிர்பார்த்திருந்த நாள் வந்தே விட்டது. எதிர்பாராதிருந்த நாளும் அதுதான் என அவள் சொல்லிக் கொண்டாள்.

ஆம்! கவுன்சிலிங்கிற்கான அழைப்பு கடுதாசியில் வந்திருந்தது.

அன்றுதான் அவள் முகம் தொட்டுக் கண்ணீர் துடைத்தேன்!

என் விரல் பற்றி முத்தமிட்டாள்.

அன்றுதான் முதல் முறையாக பிரிவு பற்றி எனக்குள்ளும் கலக்கம் ஏற்பட்டது.

தைரியம் சொல்லிக் கொண்டிருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை இழந்து கொண்டிருந்தேன்.

"என்னை விட்டுப் போயிடாதடா?" கண்ணீருடன் அன்றைய சந்திப்பை முடித்து வைத்தாள்.



தொடரும்...................!

பகுதி - 6
Author: நாமக்கல் சிபி
•8/07/2007 12:31:00 pm
பகுதி - 3

வினாத்தாள் கையில் வந்து சேர்வதற்குள் வியர்வை ஆறாய் ஓடிவிட்டது. கடைசித் தேர்வு இது.
இது வரை எழுதிய அனைத்தும் நன்றாகச் செய்து விட்டேன். இன்று ஏனோ இதயத் துடிப்பு அதிகமாக இருந்தது. ஒரு மார்க் விட்டாலும் கவுன்சிலிங்கில் ரேங்க் மாறும் என்பது தெரியும். அதுக்கு வாய்ப்பு கொடுக்கலாகாது.

வினாத்தாளை வாங்கிப் பார்த்ததும்தான் அப்பாடா என்றாகியது. எல்லாம் தெரிந்த வினாக்கள்தான். நிதானமாகத் திட்டமிட்டு எழுதலாம். பெரும்பாலான வினாக்களுக்கு வரைபடமும், விளக்கமும் இருந்தாலே போதும். மற்றவை நிரல்கள் எழுதுவதுதான். விளக்கமாக எழுதவேண்டியவை சில வினாக்கள் மட்டுமே.

ஐந்து வினாடி கண்களை மூடி ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.

அவள் என் தலை கோதினாள். விரல்களைப் பிடித்துக் கொண்டாள். கண்களில் கண்ணீருடன் முகவாய் தொட்டு என் முகத்தை நிமிர்த்தினாள்.

"டேய்! நிஜமாவே நீ மெட்ராஸ் போயிடுவியா?". என் கண்களிலும் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

"ச்சே! என்ன நினைப்பு இது? என்னை சுதாகரித்துக் கொண்ட நான் என்னை நானே கடிந்து கொண்டேன்.

விறுவிறுவென்று எழுத ஆரம்பித்தேன்.


சரியாக இரண்டரை மணி நேரத்திற்குள் எழுதி முடித்தேன். பத்து நிமிடம் விடைகளைச் சரிபார்த்து தாள்களை இணைத்துக் கட்டி கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தேன்.

நான் வெளியே வந்தபொது எனக்கு முன்பே தேர்வை முடித்துவிட்டு பலர் வெளியே காத்திருந்தனர்.

தோளில் கை போட்டவாறு உடன் நடந்தான் சிவா!

"டேய் சக்தி! இன்னியோட முடிஞ்சுதாடா நம்ம பாலி டெக்னிக் லலஃப்?"

"ஏய் என்னாச்சு! பாலி டெக்னிக் முடிஞ்சா என்னடா? அதான் அடுத்து காலேஜ் படிக்கப் போறமே?"

"அப்பவும் இதே மாதிரி ஒரே காலேஜ்ல, ஒரே கிளாஸ்ல இருப்போமா சக்தி?"

"..."

"என்னடா ஒண்ணும் பேச மாட்டேங்குறே? சொல்லுடா நாம இதே மாதிரி ஒண்ணா இருப்பமாடா?" அவன் குரல் தழுதழுத்தது.

"சொல்லுடா சக்தி" என்று என்று மீண்டும் என்னை உலுக்கினான்.

நான் அழுது கொண்டிருந்தேன்.

துள்ளித் திரிந்த அந்த குதூகலமான நாட்கள் என் நெஞ்சில் வந்து போயின. வகுப்பு நேரம் போக மீதி நேரங்களில் கலாய்த்தலும், காமெடியுமாய்.. என்னையும் சிவாவையும் தனித்தனியே பார்ப்பதே அரிது அந்த நாட்களில்.

மூன்று வருடங்களும் ஒரே வகுப்பு. அடுத்தடுத்த இருக்கை.

எனக்குள்ளும் அந்த கேள்வி எழுந்தது.

"மீண்டும் ஒன்றாய்ப் படிக்க முடியுமா?"

அவனும் சத்தமாக அழத் தொடங்கி இருந்தான்.


தொடரும்...............................................!

பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!