Author: நாமக்கல் சிபி
•2/28/2008 06:30:00 am
பகுதி - 11

"நந்தினி! சொன்னாக் கேளும்மா! சக்தியை அடிக்க நான் ஆள் அனுப்பலை"

"நீங்க எதுவும் சொல்லவேணாம்! எல்லாத்தையும் நான் பார்த்துகிட்டித்தான் இருந்தேன்! நீங்க அனுப்பலைன்னா நீங்களே போயி ஏன் அவங்களை ஜாமீன்ல வெளியே எடுக்கணும்?-"

"ஐயோ! நான் அனுப்பாம அவனுங்களா போயி அடிச்சிட்டு என் பேரைச் சொல்லி போயி சரண்டர் ஆகியிருக்கானுங்க! கட்சில என் பேரு இப்ப கெட்டுப் போயிடக் கூடாதுன்னுதான் நான் போயி வெளியெ எடுத்தேன்! அவனுகளை அப்புறமா விசாரிச்சிக்கலாம், இப்போதைக்கு முதல்ல வெளியே எடுத்துடுங்கன்னு சொல்லிதான் இன்ஸ்பெக்டர் என்னை கூப்பிட்டாரு"

"போதும்ண்ணே! எல்லாம் போதும்! எப்ப என் மனசுக்குப் பிடிச்சவன்னு தெரிஞ்சும் அவனை அடிக்க நினைச்சியோ அப்பவே உன் தங்கச்சி செத்துட்டாண்ணே!"

"நந்தினி! அப்படியெல்லாம் பேசாதடா! என்னால தாங்க முடியாது! உனக்கு ஒண்ணுன்னா நான் துடிச்சிப் போவேன்னு தெரியாதாடா உனக்கு!"

"ம்ம் தெரிஞ்சி போச்சே இப்பதான் எல்லாம்! சக்தியை நான் விரும்பினா உன் அந்தஸ்து கௌரவத்துக்கு எல்லாம் குறைச்சல் வந்துடும்னு எனக்கே தெரியாம அவனை முடிக்க முடிவு பண்ணிட்டியேன்னா"


"நந்தினி! என்னம்மா இது! உங்க அண்ணன் இவ்ளோ தூரம் சொல்றாருன்னா உனக்கு நம்பிக்கை இல்லையா! உங்க அண்ணன் உன் மேல எவ்ளோ பாசம் வெச்சிருக்காரு! கொஞ்சம் யோசிச்சுப் பாரும்மா!"

"நீங்க பேசாம இருங்க அண்ணி! எங்க அண்ணன் எப்பேர்ப்பட்டவரு! எப்பெப்ப எப்படியெல்லாம் வேஷம் போடுவாருன்னு இப்ப தெரிஞ்சி போச்சு! தங்கச்சி தங்கச்சின்னு பாசம் காட்டினதெல்லாம் வெறும் வேஷம் அண்ணி! இதயம் ஒண்ணு அவருகிட்டே இருந்தாத்தானே! இன்னும் அவரைப் பத்தி என்ன யோசிக்கணும் அண்ணி?"

"நந்தினி! கொஞ்சம் என்ன பேசுறேன்னு யோசிச்சிப் பேசு! உங்க அண்ணனைப் பத்தி உனக்கு இன்னும் முழுசாத் தெரியாது"

"மஞ்சுளா! கொஞ்சம் பேசாம இரு! நான் பேசிக்கிறேன்" என்று சமாதானப் படுத்த முயன்றான் தென்னரசு!


"தெரிய வேண்டாம் அண்ணி! தெரியவே வேண்டாம்! இது வரை தெரிஞ்சதே போதும்! இந்த மிருக குணம் உள்ளவரை என் அண்ணன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு"

"என்னம்மா நானும் பார்த்துகிட்டே இருக்கேன்! ஓவரா பேசுறியேம்மா! உங்க அண்ணனைப் பத்தி இவ்ளோ பேசுறியே! முதல்ல உன்னைப் பத்தி தெரியுமா உனக்கு?"

கோபத்தில் வெடித்தாள் மஞ்சுளா. அடுத்த கணம் பளாரென்று கன்னத்தில் இறங்கியது அறை!

"சொல்லிகிட்டே இருக்கேன்! பேசாம போடி உள்ளே"
கணீரென்ற குரலில் வந்த தென்னரசுவின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாயைப் பொத்தி அழுதவாறே தந்து படுக்கையறைக்குள் நுழைந்தாள் மஞ்சுளா!

"பார்த்தீங்களா! பேசிகிட்டிருக்கும்போது பொண்டாட்டியையே இப்படி அடிக்குறீங்களே! மனுஷ ஜென்மமா நீங்க? இனிமே நான் இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன்! உங்க சொத்து, அந்தஸ்து, கௌரவம் எல்லாத்தோடவுமே நீங்க சந்தோஷமா இருங்க"

அழுகையுடனும் ஆத்திரத்துடனும் வேகமாக வெளியேறினாள் நந்தினி!

............தொடரும்.
Author: நாமக்கல் சிபி
•2/26/2008 09:39:00 pm
அவ பேரு அம்மு! நான் செல்லமா அம்முன்னுதான் கூப்பிடுவேன்!
அவ இல்லாம என்னால தனியா இருக்க முடியுமான்னு நான் ஒரு நாளும் நினைச்சி கூட பார்த்ததில்லை!

என்னை எப்படியெல்லாம் பார்த்துக்குவா தெரியுமா?
காலையில நான் எழுந்திருக்கும்போதே மணக்க மணக்க காஃபி ரெடியா இருக்கும். கோப்பையை எடுக்க கையை நீட்டினா கை மேல செல்லமா ஒரு அடி விழும்.

"முதலில் பல் துலக்கிட்டு அப்புறம்தான் காஃபி"ன்னு சொல்லுவா!
அவசரம் அவசரமா காலைப் பணிகளை அவ செஞ்சி முடிச்சி எனனை ஆஃபீஸ் அனுப்புற அவளோட பரபரப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்!

அப்பப்போ தன் புறங்கையாலே தன் நெத்தி வேர்வையைத் தொடச்சிக்குவா! சில நாள் டை கட்ட மறந்துட்டு கெளம்பிடுவேன். வாசல் வரை ஓடி வந்து அவளே என் கழுட்துல டை கட்டி விடுவா!

அன்னிக்கு ஒரு நாள் என் பாஸ் என்னைத் திட்டிட்டார். சோகமா வீட்டுக்கு வந்தேன்.

உள்ளே வந்தவுடனே கண்டுபிடிச்சிட்டாளே!

என் முகத்தை அவளோட ரெண்டு கையால தாங்கிகிட்டு "என்னடா ஆச்சு! ஆஃபீஸ்ல யாராச்சும் திட்டினீங்களா?" ன்னு கேட்டா பாருங்க, என் சோகம் எல்லாம் பறந்து போச்சு.

"என் செல்லத்தைத் திட்டுற அந்த ஆஃபீஸ்லே இனிமே இருக்கக் கூடாது, ரிசைன் பண்ணிடுப்பா" ன்னு சொன்னா.


"அப்புறம் என் உயிர் தேவதைக்கு நான் எப்படி நெக்லஸ், பங்களா எல்லாம் வாங்குறதாம்?"னு கேட்டேன்.
"போடா லூஸு" னு செல்லமா கோவிச்சிகிட்டா!

வேற யாராச்சும் லூஸுன்னு சொல்லி இருந்தா சண்டைக்குப் போயிடுவேன். ஆனா என் அம்மு சொன்னா எனக்குக் கோபம் வராது. என்னை அவ அப்படிக் கூப்பிடுறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

எனக்கு எல்லா நேரமும் துணையா அவ இருப்பா! நான் சிரிக்கிறப்போ அவ என்னன விட சந்தொசப் படுவா!
நான் அழறப்போ என்னை விட அதிகமா துடிச்சிப் போயிடுவா! என்னை அவ மடில படுக்க வெச்சிகிட்டு தலையை கோதிவிட்டு எனக்கு ஆறுதல் சொல்லுவா! அப்புறம் என் சோகம் போயிடும்

அன்னிக்கு ஒரு நாள் நான் ரொம்பவும் நேசிச்ச என் மனைவி என்னை விட்டுட்டுப் போயிட்டா! நான் ஓன்னு அழுதுட்டேன்! அன்னிக்கும் அம்முதான் என்னை மடில சாய்ச்சிகிட்டு ஆறுதல் சொன்னா! அப்போ அவ அமைதியா அழுதா! அவ கண்ணீர்த்துளிகள் என் தலல மேல சூடா விழுந்ததை என்னாலயும் உணர முடிஞ்சது!

அன்னிலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் எனக்கு தினமும் ஆறுதல் சொல்ல்கிட்டு இருக்கா! நான் கூட துக்கம் சோகம் எல்லாத்தையும் மறந்துட்டேன்! ஆனாலும் தினமும் அம்முவோட மடியில படுத்துகிட்டு அழுவேன்! அவளும் அழுவா!

தினமும் என் அம்மு எனக்கு லெட்டர் போடுவா! ஆனா இந்த போஸ்ட் மேன் எந்த லெட்டரையும் கொண்டு வந்து கொடுக்குறதில்லை! ஆனாலும் என்ன எழுதியிருப்பான்னு எனக்கு தெரியும்!

இப்பக் கூட போஸ்ட்மேன் வர நேரம்தான்! அவளோட லெட்டர்க்காகத்தான் காத்துகிட்டிருக்கேன்!

சரி! உங்களுக்கும் நேரம் ஆகுதுன்னு நினனக்கிறேன். இப்ப அம்மு வர நேரம் ஆச்சு! எனக்கு ஊசி போட அழைச்சிட்டுப் போவாங்க! வலிக்காம போடுங்கன்னு அம்முதான் நர்ஸ்கிட்டே சொல்லி விடுவாங்க!

வரட்டா! நாளைக்குப் பார்ப்போம்!

(இதே தலைப்புல டிராஜெடி இல்லாம நம்ம இம்சையக்கா இன்னொரு கதை சொல்லுவாங்க என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்)

பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!