Author: நாமக்கல் சிபி
•11/11/2007 10:32:00 am
பகுதி 10

அலுவலகக் கோப்பொன்றில் கையொப்பம் இட்டுக் கொண்டிருந்த தென்னரசுவின் செல்பேசி ஒலித்தது.

"ஹலோ"

"சார்! நான் எஸ் ஐ தனசேகரன்"

"சொல்லுங்க ஆட்களை ட்ரேஸ் பண்ணிட்டீங்களா?"

"ரெண்டு நாளா சிட்டி முழுக்க சர்ச் பண்ணிட்டோம் சார்! ஆனா இன்னிக்கு அவங்களா வந்து சரண்டர் ஆயிட்டாங்க!"

"குட்! எஃப்.ஐ.ஆர் போட்டுட்டு யாரு அனுப்புனாங்க என்ன ஏதுன்னு விசாரிங்க!"

"சார்.. ஆனா எஃப்.ஐ.ஆர் போடுறதுலே ஒரு சிக்கல்!.."

"யோவ். என்னய்யா சிக்கல் அதிலே! காலேஜ்க்குள்ளே புகுந்து ஒரு அப்பாவிப் பையனை அடிச்சிருக்கானுவ! நீங்களே தேடிப் பிடிச்சி ஸ்டேஷனுக்கு அள்ளிகிட்டு வந்திருக்க வேண்டாம்!, ஏன் பெரிய இடத்து ஆளுங்களா, சொல்லுங்க! எதுன்னாலும் நான் பார்த்துக்கறேன்! முதல்ல எஃப்.ஐ.ஆர் போட்டுடு"

"சார்! வேற யாராவதா இருந்தாலும் கூட இந்நேரம் எல்லா ஃபார்மாலிட்டீசும் முடிச்சிட்டு உங்ககிட்டு சொல்லி இருப்பேன். இவங்க எல்லாரும் உங்க ஆளுங்க..! நீங்கதான் அடிக்க அனுப்பிச்சதா வேற சொல்றாங்க"

"......................"

"அதான் சார் என்ன பண்ணுறதுன்னு தெரியாம கொஞ்சம் வெயிட் பண்ணி உங்ககிட்டெ ஒரு வார்த்தை சொல்லிடலாம்ணு"

"அப்படியா சரி! அவங்களை ஸ்டேஷன்லலயே வெச்சிருங்க! தோ இன்னும் ஒரு மணி நேரத்துல நானே அங்க வரேன்"

மருத்துவமனையில் சக்தியின் கட்டிலருகே நாற்காலியில் அமர்ந்து ஆப்பிள் பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி சக்தியிடம் கொடுத்துக் கொண்டிருந்தாள் நந்தினி.

தாடைப் பகுதிகளில் வலி என்றபோதும் பெரிதான காயம் எதுவும் இல்லாததால் உண்பதற்கு சிரமம் எதுவும் இருக்கவில்லை சக்திக்கு!

"சக்தி! உங்க அப்பாவுக்கு தகவல் கொடுத்தாச்சு! இந்நேரம் புறப்பட்டு வந்துகிட்டிருப்பாங்க! அநேகமா சாயங்காலத்துக்குள்ளே வந்துடுவாங்க!"

"ஐயோ! கேள்விப்பட்டவுடனே துடிச்சிப் போயிருப்பாங்களே நந்தினி! யாரு எதுக்கு அடிச்சாங்கன்னே தெரியாம என்னன்னு சொல்லுறது?"

சக்தியின் முகத்தில் கவலை ரேகைள் படரத் தொடங்கியதைக் கவனித்த நந்தினி

"சக்தி! ரிலாக்ஸ் ஆ இருங்க! அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்"

என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே அவளது செல்பேசி ஒலித்தது.

தனது செல்போனை எடுத்துப் பார்த்தவள்,

"இருங்க சக்தி இதோ வந்துடறேன்.." என்று எழுந்து சென்றாள்.

"ஹலோ யார் பேசுறது?"

"நாங்க யார்ங்குறது இப்போ முக்கியம் இல்லை மேடம்! சக்தியை அடிச்சது யாருன்னு உங்களுக்குத் தெரிஞ்சாகணும், இப்போ அதுதான் முக்கியம்"

"யாரு...யாரு அவங்க? எதுக்காக அடிச்சாங்க...? உங்களுக்குத் தெருயுமா"?

படபடவென கேள்விகளை வீசினாள் நந்தினி.

"அட! அவசரப் படாதீங்க மேடம்! பொறுமையாக் கேளுங்க! இப்போ டையத்தை வேஸ்ட் பண்ணாம சீக்கிரமா யானைக் கவுளி C2 போலீஸ் ஸ்டேஷன் போங்க! உங்களுக்கே எல்லாம் தெரிய வரும், அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், நீங்க அங்கே போறது பத்தி உங்க அண்ணன்கிடே மூச்சு விட்டுடாதீங்க! சீக்கிரம் கிளம்புங்க! இப்ப கட் பண்ணிடறோம்"

தொடர்பு துண்டிக்கப் பட்டது. கால் ரெஜிஸ்டரில் அந்த எண்ணைப் பார்த்தாள்.
பி.எஸ்.என்.எல் லேண்ட் லைன் நம்பராக இருந்தது.

"ஏதாச்சும் பூத்லே இருந்து பேசி இருப்பாங்க!" என்று நினனத்துக் கொண்டே புறப்பட ஆயத்தமானாள்.

யானைக் கவுளி எனப்படும் எலிபெண்ட் கேட் பகுதியின் சமீபத்தை நெருங்கியதும் மீண்டும் தொலை பேசி அழைத்தது.

"ஹலோ! ஸ்டேஷன் பக்கம் போயிட்டீங்களா! உடனே உள்ளே போகாதீங்க! ஒரு பத்து நிமிஷம் வெளியே கொஞ்சம் மறைவா வெயிட் பண்ணி ஸ்டேஷன் வாசலை கவனிங்க!"

இதனை மட்டும் சொல்லிவிட்டு தொடர்பு துண்டிக்கப் பட்டது. இந்த முறை வெறொரு தொலைபேசி எண் இருந்தது.

அதன் படியே காவல் நிலையத்திற்கு வெகு அருகே செல்லாமல் சற்று முன்பாகவே எதிர்ப்புறம் இருந்த ஒரு ஓட்டலில் நுழைந்து அதன் வாசலுக்கு உட்புறமாக நின்று காவல் நிலையத்தை கவனிக்கத் தொடங்கினாள்.

ஒரு பத்து நிமிடம் போலக் கடந்ததும் ஸ்டேஷன் உட்புறமிருந்து ஒரு வெள்ளைச் வேட்டி சட்டை யணிந்த வாட்ட சாட்டமான நபர் வருவது தெரிந்தது. பின்னாலேயே நான்கைகந்து பேர்! அட! சாட்சாத் சக்தியை அடித்த அதே அடியாட்கள்!

கேட் அருகில் நின்ற அந்த வாட்ட சாட்டமான நபர் அவர்களிடம் ஏதோ பேசி அனுப்ப அவர்கள் விருவிறுவென்று சாலைக்கு வந்து வழியில் ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறிச் சென்றனர்.

ஐந்து நிமிடத்தில் காவல் நிலைய கேட் அருகே ஒரு டாட்டா சஃபாரி வந்து நிற்க அந்த வண்டியில் ஏறுவது தன் அண்ணன் எம்.எல்.ஏ தென்னரசுவேதான் என்பதை உணர்ந்து அதிர்ச்சியில் உறைந்து கொண்டிருந்தாள் நந்தினி.

அவளது உதடுகள் துடித்தன. கை விரல் நகங்களை வேக வேகமாக கடித்துக் கொண்டிருந்தாள் அவளையும் அறியாமல்!

தொடரும்.....................!
Author: நாமக்கல் சிபி
•11/11/2007 09:46:00 am
பகுதி - 9

ஒன்றரை நாட்கள் கழித்து மெல்லக் கண் திறந்தான் சக்தி!
தான் இருப்பது ஒரு மருத்துவமனையின் சூழல் என்று மங்கலாகத் தெரிந்தது. தலை மற்றும் வலது கையில் வலியை உணர்ந்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் நினைவிற்கு வந்தது. லஞ்ச் பிரேக்கில் நந்தினியுடன் கேண்டீன் நோக்கிச் சென்றதும் அப்போது எதிரே நன்கைந்து பேர் ஓடி வந்ததும், தன்னை நோக்கித்தான் வருகிறார்கள் என்பதை உணர்ந்து சுதாகரிப்பதற்குள் தபதபவென தன் மீது தொடுக்கப் பட்ட தாக்குதல்களும்.
சட்டென அப்போது தன்னுடன் நந்தினியும் இருந்தது நினைவில் வந்தது.

"கடவுளே அவளுக்கு ஒன்றும் ஆகி இருக்கக் கூடாது" மனம் பதைத்தது.

மெல்ல வலது கையை உயர்த்த முயற்சித்தான். முடிய வில்லை. வலி உயிர் போய்விடும்போல் இருந்தது. யாரேனும் அருகில் இருக்கிறார்களா என்று பார்த்தான். அறை வாசலை ஒரு நர்ஸ் கடந்து போவது தெரிந்தது. குரலை உயர்த்தி அழைக்க முயன்றான். சப்தம் அதிகம் எழவில்லை.

"சிஸ்டர்" முணகலாக குரல் வெளிப்பட்டது. உதடுகளிலும் காயமடைந்திருப்பதாகத் தோன்றியது. உதடுகளும் கொஞ்சம் தடித்துப் போயிருந்தன. அப்படியே மீண்டும் மயங்கிப் போனான்.

கட்டிலருகே யாரோ வந்தது போல் தோன்ற மீண்டும் கண் விழித்தான்.
நந்தினி கட்டில் அருகே நின்றிருந்தாள்.

"நல்ல வேளை அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை போலும்.." உள்ளூர நிம்மதி அடைந்தான்.

"ந..ந..ந்தினி"

சட்டென கவனம் கலைந்த நந்தினியின் முகத்தில் புன்னகை பிறந்தது.

"சக்தி.. ஆர் யூ ஆல் ரைட்?"

அவளுக்குக் குரல் தழுதழுத்தது. சட்டென கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. இரு கரங்களாலும் முகம் பொத்தி அழத் தொடங்கினாள்.

இவனால் தொடர்ந்து பேசவும் முடியவில்லை.
"எதற்காக அழுகிறாள் என்றே தெரியவில்லை. அழுகையை எப்படி நிறுத்துவது? என்றும் புரியவில்லை".

அப்படியே கண்களை மூடிக் கொண்டான். இப்போது அவன் கண்களில் இருந்தும் ஒரு சொட்டு கன்னத்தில் வழிந்தது.


சிறிது நேரத்தில் அவளது அழுகை ஓய்ந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் புன்னகைத்தாள்.

"சாரி சக்தி! " என்று அவனது இடது கரத்தைப் பற்றிக் கொண்டாள்.

தொடரும்.....................!
Author: நாமக்கல் சிபி
•10/22/2007 10:53:00 am
பகுதி 8

"டேய் அங்க பாருங்கடா! பூவும் புயலும் ஒண்ணா வருது!" என்ற சக கல்லூரி மாணவர்களின் அங்கலாய்ப்பைப் பொருட்படுத்தாது வண்டியை கல்லூரிக்குள் ஓட்டிச் சென்றான் சக்தி!

"ரொம்ப தாங்க்ஸ் சக்தி" என்றாள் புன்னகையுடன்.

"தாங்க்ஸை ஒரு காஃபி சாப்பிடுகிட்டே சொல்லலாமே" என்று காண்டீனிற்கு அழைத்துச் சென்றான்.

புரொபெசர் சாம் உள்ளே நுழையவும் சலசலப்புகள் குறைந்து வகுப்பு அமைதியானது.

"டியர் ஸ்டூடண்ட்ஸ் போன செமஸ்டருக்கான எக்ஸாம் ரிசல்ட் வந்தாச்சு!
வழக்கம்போல யுனிவர்சிட்டி ரேங்கிங் நமக்குத்தான் கிடைச்சிருக்கு. அது யாருன்னு உங்களுக்கே தெரியும்"

மணவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். பிறகு அவரையே ஆர்வமுடன் பார்த்தனர்.

"யெஸ்! நீங்க எல்லாரும் நினைச்சது சரிதான். மிஸ்டர் சக்தி! ப்ளீஸ் கெட் அப்! அண்ட் கம் ஹியர்" என்று அவர் உற்சாகமாகக் குற கரவோலியில் வகுப்பு அதிர்ந்தது.

சக மாணவர்களோ "சக்தி சக்தி.." என்று உற்சாகக் குரல் கொடுத்தார்கள். அவர்களே சக்தியை எழுப்பி வகுப்பின் முன்புறமாகத் தள்ளிச் சென்ற்னர்.

சக்திக்கு ஒரு புறம் உற்சாகமும், மகிழ்ச்சியும் பெருகி வந்தாலும் ஒரு புறம் கூச்சமாக இருந்தது.
"என்னடா இது, அளவுக்கதிகமான ஆர்ப்பாட்டமாக இருக்கிறதே" என்று நினைத்தவன் "பின்னே சும்மாவா கோல்டு மெடல் அல்லவா, யுனிவர்சிட்டி ரேங்கிங்" என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டான்.

நந்தினிக்கு இதயத் துடிப்பு அதிகமானது. அவளது உதடுகள் தன்னிச்சையாய் நகம் கடிக்கத் தொடங்கியிருந்தன.

மதிய உணவு இடைவேளை. தனது இருக்கையிலிருந்து சக்தி எழும் முன்னர் நந்தினி அவனை அணுகினாள்.

"கங்கிராட்ஸ் சக்தி! நான் எதிர்பார்க்கவே இல்லை! ஆனா சாதிச்சிட்டீங்க"

புன்னகையுடன் கை குலுக்கினாள்.

"தாங்க்ஸ் நந்தினி. நானும்தான் எதிர்பார்க்கலை. அன்னிக்கு பின்னாடி இருந்து பசங்க பண்ணின சேட்டைல கை தூக்கினேன். சார் பாட்டுக்கு அவரா முடிவு பண்ணிடார். அதுக்கப்புறம் தினமும் எனக்கு தனியா டியூஷன் எல்லாம் எடுத்து...., நான் பட்ட கஷ்டங்களை விடவும், அவரோட உழைப்பையும் மறக்க முடியாது. ஹீ ஈஸ் எ கிரேட் மேன், ரொம்பவே கேர் எடுத்துகிட்டாரு"

கல்லூரி காம்பவுண்ட் வாசலில் ஒரு ஜீப் மற்றும் இரண்டு மூன்று பைக்குகளில் சிலர் வந்து இறங்கி இருந்தனர்.

கண்ணில் படும் ஒவ்வொருவராக அழைத்து "இங்க யாருடா சக்தி, அவன் கிளாஸ் எங்கடா?" என்றவாறு அராஜமாக அலைந்து கொண்டிருந்தனர்.

வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு விறுவிறு வென்று கல்லூரி வளாகத்தில் சுற்றி வந்தனர். சக்தியின் வகுப்பறையைக் கண்டுபிடித்து அங்கே செல்ல அங்கே வகுப்பு காலியாக இருந்தது.

"டேய் காண்டீன் போயிருப்பான், வாங்கடா போலாம்" என்று காண்டீனைத் தேடிப் புறப்படனர்.

சாப்பாட்டைத் தட்டில் போட்டுக் கொண்டு பிசைந்து கொண்டே இருந்தாள் சுகந்தி. அவளது கவனம் சாப்பாட்டின் இல்லை என்பது நன்கு தெரிந்தது.

காலையில் எழுந்ததில் இருந்தே மனம் ஏதோ இனம்புரியாத சஞ்சலத்தில் இருந்தது. ஒரு வாய் சாப்பிட்டதும் அவளுக்குப் புரையேறியது.

மூக்கின் வழியாக சோற்றுப் பருக்கைகள் வெளியே வந்து விழுந்தன. கண்ணில் நீர் வழிந்தது.

"ஏண்டீ! பக்கத்துலதான தண்ணி இருக்கு! எடுத்துக் குடிக்க வேண்டியதுதானே"
சமையற்கட்டிலிருந்து அம்மாவின் குரல் கேட்டதும் கிளாஸை எடுத்து மடக் மடக் என்று தண்ணீரைப் பருகினாள்.

"சக்தி! உனக்கு ஏதோ ஆபத்துடா! கடவுளே! சக்திக்கு ஒண்ணும் ஆயிடக் கூடாது"

மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் சுகந்தி!

தொடரும்.....................!
Author: நாமக்கல் சிபி
•10/21/2007 10:12:00 am
பகுதி 7


சலவை செய்யப்பட்ட வெள்ளை வேட்டி சட்டையுடன் சோஃபாவில் வாட்ட சாட்டமாய் அமர்ந்திருந்தார் எம்.எல்.ஏ தென்னரசு. 40 வயதைக் கடந்திருந்தாலும் இளமையான தோற்றத்திலும் சுறுசுறுப்பிலும் 35 ஐத் தாண்டியிருக்க மாட்டார் என்றே நம்பத் தோன்றும். பின்புறம் பவ்யமாய் பி.ஏ கையில் கோப்புகளுடன் நின்றிருக்க எதிரில் இருப்பவர்களை ஏறிட்டார்.



"சொல்லுங்க மாணிக்கம் இன்னும் என்னதான் பிரச்சினை அந்த இடத்திலே?"


"ஐயா! பார்ட்டி கிரயம் பண்ணுறதுலே எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனா அங்க குடி இருக்கிற காலணி ஆளுங்கதான் காலி பண்ண மாட்டோம்னு பிரச்சினை பண்ணுறாங்க போல"


"எல்லாரும் அப்படித்தானா, இல்லை முன்னாடி ரெண்டு மூணு பேரு விறைச்சிகிட்டு நிக்க மீதியெல்லாம் அவங்க சொல் படி முரண்டு பண்ணுறாங்களா?"


"ஆமாங்க, இதுலே ஒரே ஒரு ஆள்தான் எல்லாரையும் தூண்டி விட்டுகிட்டு இருக்காரு. பேரு செல்லத் துரை, சிட்டி டிரான்ஸ்போர்ட்ஸ்லே மேனேஜர் போல, யூனியன்லயும் செல்வாக்கான ஆளாம்"


"ஓஹோ! அதான் துள்ளுறானா? இன்னும் ஒரு தபா பேசிப் பாருங்க! அப்பவும் மசியலைன்னா சொல்லுங்க! பிரச்சினையை முடிச்சிடலாம்!"


சொல்லிக் கொண்டிருக்கும்போதே செல் போன் ஒலித்தது.


"ஹலோ! சொல்லுடா!'


".............."


" அப்படியா! சரி! உடனே வண்டி அனுப்புறேன்! நீ அங்கேயே இருடா!"


"................"


"ஓகே!"


தனது பி.ஏ. விடம் திரும்பினார்.


"யோவ்! என்னய்யா வண்டிய மெயிண்டெயின் பண்னுறீங்க? காலேஜ் போறதுக்குள்ளே பிரேக் டவுன் ஆகி நின்னிருக்குது!

உடனே வேற வண்டிய அனுப்பு! போ!"


பி.ஏ பதை பதைத்து ஓடினான்.



பத்து நிமிடங்களு மேல் ஆகியும் பொறுமை இழந்த நந்தினி மீண்டும் தனது செல் ஃபோனை எடுத்தாள்.



"அண்ணே! எனக்கு டைம் ஆகுது! நான் ஆட்டோ பிடிச்சி பொயிக்கிறேன்"



"ஐயோ! வேண்டாம்டா! வண்டி இப்ப வந்துடும்! கொஞ்சம் வெயிட் பண்ணுடா!"



"போங்க அண்ணே! ஃபோன் பண்ணி 10 நிமிசம் ஆச்சு! இன்னும் கார் வரக் காணோம்!"



"அட! பேசிகிட்டிருக்கிற நேரம் வந்துடும்டா! காலேஜ் போய்ச் சேர்ந்ததுன் எனக்கு ஒரு ஃபோன் போட்டுடு! சரியா?"



"ச்சே!" என்றவாறு செல் ஃபோனைத் துண்டித்து கைப் பையில் வைத்தாள்!



அப்போது மெதுவாக அவளைக் கடந்து சென்ற மோட்டர் சைக்கிளில் பயணித்தவனை சட்டென அடையளம் கொண்ட நந்தினி முகம் மலர்ந்தாள்.



சற்று குரலை உயர்த்தி



"ஹாய் சக்தி!" என்று அழைக்க



வண்டியின் வேகம் முழுமையாய்க் குறைந்து நின்றது!



திரும்பி வந்த சக்தி இவளைப் பார்த்ததும் புன்னகைத்தான்!



"ஹாய் நந்தினி! என்ன இந்த இடத்துலே வெயிட்டிங்?"



"போ சக்தி! ககர் பிரேக் டவுன் ஆயிடுச்சு! அண்ணன் வேற கார் அனுப்பி இருக்கார்! அதுக்குத்தான் வெயிட்டிங்க்!"



என்று சலித்துக் கொண்டே சொன்னவள், சட்டென முகத்தில் பிரகாசம் காட்டினாள்.



"சக்தி! நீயும் காலெஜ்க்குத்தானே போறே? நான் உன் கூடவே பைக்ல வந்துடறேனே!"



"என்னாது! என் கூடவா? அம்மா தாயே! நீங்க உங்க வண்டியிலயே மெதுவா வாங்க! நான் கெளம்புறேன்! ஆளை விடு!" என்றான்.



"என்ன சக்தி இது! அஸ் அ பிரண்ட்! இந்த ஹெல்ப் கூட செய்யக் கூடாதா? இல்லாட்டி என்னைக் கூட்டிகிட்டு போக பயமா?"



"என்னாது பயமா? எனக்கா? வந்து உக்காருங்க சீட்லே!" என்றான்.



நந்தினி தனது கூந்தலை பின்புறம் ஒதுக்கிவிட்டுக் கொண்டே அவனது வண்டியில் ஏறி அமர்ந்தாள்.



"மணி அந்த டிரைவர் வந்தவுடன் நேரா காலெஜ்க்கு வரச்சொல்லிடுங்க" என்று கூறிவிட்டு,



"ம் புறப்படலாம் சக்தி" என்றாள்.



விபரீதத்தை விலை கொடுத்து வாங்கி இருப்பதை அறியாமல் வண்டியை உதைத்துக் கிளப்பினான். அவளது மனமோ உற்சாகத்தில் "ஊ ல லால்லா" என்று பாடியது!



வண்டியின் வேகத்தில் பின்னலிடப் படாத அவளது கேசம் காற்றில் அலையாய்ப் பறந்தது.



"சக்தி! கொஞ்சம் மெதுவாப் போயேன்! விழுந்துடுவெனோன்னு பயமா இருக்கு" என்று கூறிக் கொண்டே அவனது வலது தோளை அழுந்தப் பற்றிக் கொண்டாள்.



காலத்தின் குரல்





இறந்த காலம் : ஐயோ! இவன் பழசை மறந்துட்டானா என்ன? தைரியத்தைப் பத்தி பேசினதும் டக்குன்னு கூட்டிகிட்டு கெளம்பிட்டானே!



நிகழ் காலம் : மச்சி! டவுன்லே இதெல்லாம் சகஜம்டா! வண்டியிலதான கூட்டிகிட்டுப் போறான்! வாழ்க்கைலயா கூட்டிகிட்டுப் போறான்?



எதிர் காலம் : பஞ்சும் நெருப்பும் இப்பத்தான பக்கத்துலெ வெச்சிருக்கென்! போகப் போகப் பாருங்க!



தொடரும்.............................!
Author: நாமக்கல் சிபி
•9/11/2007 10:13:00 am
பகுதி 6


"என்னவனுக்கு,
உனக்கெனப் பிறந்தவள் எழுதிக் கொள்வது. இங்கு நான் நலம், நீ நலமாய் இருக்கிறாய் என்று அறியப் பெற்றதால்.
இக்கடிதம் உன் கைக்கு வந்து சேரும் நேரத்தில் பல பேர் உன்னை வாழ்த்தி முடித்திருக்கலாம். ஆனாலும் என் கடிதத்திற்காகத்தான் காத்துக் கொண்டிருப்பாய் என்பது தெரியும்.
உன் பிறந்த நாள் அன்று உன்னோடிருக்க முடியவில்லை என்று வருத்தம்தான். ஆனால் என்னடா செய்வது. இது காலத்தின் கட்டாயம் ஆயிற்றே!
இரண்டாண்டுகளுக்கு முன்னால் இதே நாள் நினைவிருக்கிறதா உனக்கு?அன்றுதானே இனிப்பைத் தந்து விட்டு இதயத்தில் இடம் கேட்டாய்!
புதுச் சட்டை அணிந்து வந்து புயலை என்னுள் விட்டுச் சென்றாய்! அதைத்தானே நெஞ்சுக்குள் பொத்தி வைத்து வாழ்ந்து வருகிறேன்.
நீ அருகில் இல்லாத நாட்களைக் கடத்த அந்த நினைவுகள்தானே என்னை இயங்க வைக்கின்றன.
பரிசாய் என்ன அனுப்பலாம் என்று யோசித்தேன்! ஒன்றும் புலப்படவில்லை எனக்கு! என்னையே தந்த பின்னர் வேறென்ன தருவது உனக்கு!
இருந்தாலும் என் நினைவுகளை உன்னோட இறுத்திவைக்க இத்தோடு இரண்டு முத்தங்கள். நீ இந்த வரிகளை வாசிக்கும்போது நான் கண்களை மூடிக் கொண்டிருப்பேன்! வெட்கமாக இருக்கும் அல்லவா எனக்கு?
இவை உனக்கான மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல! எனக்கான உயிர்த்தலுக்கும்தான்!
இப்படிக்கு,
என்றென்றும் உனக்காக,
உன்னவள்!
மீண்டும் மீண்டும் படித்து முடித்தேன். எத்தனை முறையென்று தெரியவில்லை.
படிப்பதும் நெஞ்சின் மீது கவிழ்த்துக் கொள்வதுமாய்......
வாழ்த்திய நண்பர்கள் யார் யாரென்று நினைவில் இல்லை.
எந்தெந்த பாடப் பிரிவுகள் வந்து சென்றன என்றும் புரியவில்லை.
நானும் வகுப்பில்தான் இருந்தேன். உடலால் மட்டும்!
உள்ளத்தில் அவளோடு கைகோர்த்து கடற்கரை மணலில் அவளோடு கால் புதைய நடந்து கொண்டிருந்தேன்.
"ஹேப்பி பர்த் டே டூ யூ சக்தி..."
புன்னகைத்தேன்.
அழகான குரலில் எனக்கே எனக்கான தேவதை வாழ்த்துகிறாள்.
"ஹேப்பி பர்த் டே டூ யூ சக்தி..."
மீண்டுமா. சிரித்தேன்.
"சக்தி.. ஆர் யூ ஆல்ரைட்" - பிடித்து உலுக்கினாள்.
திடுக்கிட்டு விழித்தேன்.
வகுப்பில் யாருமில்லை. நான் மட்டும் தனியே இருந்தேன்.
எதிரில் கையில் பூங்கொத்தும், உதட்டில் புன்னகையுமாய் நந்தினி நின்றிருந்தாள்.
"ஓ! ஸாரி.. கவனிக்கலை.." என்றேன்.
"இட்ஸ் ஆல் ரைட்.. இன்னிக்கு உங்க பர்த் டேவாம், அதான் விஷ் பண்ணிட்டுப் போலாம்னு நானும் வெயிட் பண்ணினேன். திஸ் ஈஸ் ஃபார் யூ"
என்று பூங்கொத்தை நீட்டினாள்.
-----------------------------------------------------------------------------------------காலத்தின் குரல்
நிகழ் காலம் : "மச்சி! ஆப்பு எத்தனை அலங்காரமா ரெடியாகுது பாத்தியா?"
இறந்த காலம்: "ஆமாம்டா! பாவம் இந்த பயபுள்ளை!"
எதிர் காலம் : "ஏண்டா இப்படி அவசரப் படுறீங்க? பொறுத்திருந்துதான் பார்ப்போமே! என்னதான் நடக்கப் போகுதுன்னு!"
Author: நாமக்கல் சிபி
•8/14/2007 11:23:00 am
பகுதி 5

எப்படியோ கவுன்ஸிலிங், அட்மிஷன், ஹாஸ்டல் எல்லாம் முடிந்து இன்றுதான் முதல் நாள் வகுப்பு.
முதன் முதலாக ஒரு கல்லூரி வாழ்க்கை. ஒரு பெரிய பொறியியல் கல்லூரியில். அதுவும் சென்னை.

லேடரல் எண்ட்ரிதான்(நேரடியாக இரண்டாம் ஆண்டு). இருந்தாலும் முதல் நாள் வகுப்பில் கொஞ்டம் மிரட்சியாகத்தான் இருந்தது.

தாவணியிலும், சுடிதாரிலும் பார்த்த பெண்களை இங்கே வித விதமான உடைகளில் காண முடிந்தது.
மாணவர்களிடமும் ஒரு மாதிரி எதைப் பற்றியும் கவலை கொள்ளாதது போலவே சிகையும், ஒரு அசால்ட்டான பாவனையும் மிகுந்திருந்தது. ஆனாலும் ஒரு வித தெளிவு இருந்தது அவர்களிடம்.

வகுப்பிற்குள் நுழைந்ததும் மூன்றாவது வரிசையில் ஒரு இருக்கை காலி இருந்தது.

"இங்கே யாராச்சும் வறாங்களா?" தயக்கத்துடன் கேட்டேன்.

"நோப், யூ கேன் ஜஸ்ட் சீட் ஹியர், எனிவே ஆர் யூ லேட்டரல் எண்ட்ரி?"

"ஆமாம்"

"ஐயாம் ராஜ்" என்று கை நீட்டினான்.

"ஹாய், ஐ யாம் சக்தி" என்றேன்.

மணி 9.15 ஆகியிருந்தது. ஆசிரியர் வரும் நேரம்தான். வகுப்பிற்குள் சல சலவென சத்தம் எழுந்து கொண்டே இருந்தது.

"நம்ம பாலிடெக்னிக்கில்லெல்லாம் இந்நேரத்திற்கு எந்த சத்தமும் இருக்காதே, ஆசிரியர் வராவிட்டாலும் கூட" நினைத்துக் கொண்டேன்.

"மச்சி, இன்னிகு ஃபர்ஸ்ட் அவர் நம்ம தருமி கிளாஸ்டா!" என்று சொல்லிக் கொண்டே ஒரு மாணவன் எங்களைக் கடந்து சென்றான்.

"அது என்ன தருமி! பேர் வித்தியாசமா இருக்கே?" என்றேன்.

"ஹிஹி.. அதுவா அவரோட உண்மையான பேர் புரொபெசர் சாம். பசங்களை எப்போ பாரு கேள்வி கேட்டுகிட்டு இருப்பாரு. அதனால சீனியர் பசங்க அவருக்கு வெச்ச பேரு தருமி. அவருக்குக் கேள்வி கேக்க மட்டும்தான் தெரியுமாம்" என்றான் ராஜ்!

அதற்குள் புரபொஸர் வகுப்பிற்குள் நுழைந்தார். புதிய மாணவர்களின் பெயர்களை கேட்டு அறிமுகப் படுத்திக் கொண்டு வகுப்பைத் தொடங்கினார்.

"ம். ஏறத்தாழ இன்னும் ரெண்டு மாசத்துல செமஸ்டர் எக்ஸாம் வரப் போகுது. உங்கள்ள யாராருக்கெல்லாம் கோல்டு மெடல் வாங்குற எண்ணம் இருக்கு?" அனைவரையும் பார்த்துக் கேட்டார் சாம்.

"ஆரம்பிச்சிட்டாருடா" என்று ராஜ் சலித்துக் கொண்ட அதே நேரம் எனது வலது விலாப் பகுதியில் சுரீரென்ற வலியை உணர்ந்த நான் சட்டென முழங்கைய்யை உயர்த்தி குனிந்து பார்த்தேன்.

"வெரி குட்! இப்படிப்பட்ட ஸ்டூடண்ட்ஸைத்தான் நான் எதிர்பார்த்தேன். தம்பி யாருப்பா அது? எழுந்திருப்பா! உன் பேரென்ன?" என்று கேட்டுக் கொண்டிருந்தார் பேராசிரியர் சாம்.

மீண்டும் வகுப்பைக் கவனிக்க நிமிர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது. என்னை நோக்கித்தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது. பின்புற இருக்கையிலிருந்து மெல்லிய சிரிப்பொலி கேட்டது.


"சார் அதுவந்து..! நான் அதுக்காக கை தூக்கலை சார்!" என்று தயங்கித் தயங்கிச் சொன்னது அவர் காதுகளில் விழவே இல்லை. எழுந்து வேறு நின்றாயிற்று.

"குட்! அப்படித்தான் இருக்கணும்! உன் பேர் என்ன?" மீண்டும் கேட்டார்.

"சக்தி"

மீண்டும் விளக்கம் சொல்ல நினைத்தால் தொண்டையிலிருந்து வெறும் காற்று மட்டுமே வந்தது.

"லேட்டரல் எண்ட்ரிதான? டிப்ளமோல எவ்வளவு பெர்சண்டேஜ்?"

"97"

"குட்! அப்போ நீ காம்படீட் பண்ணலாம்! நீ கோல்டு மெடல் வாங்குவே! ஐ பிலீவ் இட்!" என்றார் ஒரு புன்னகையுடன்.

"என்னடா இது வம்பாப் போச்சே! பின்னாடி இருந்து எவனோ இடுப்புல குத்தி விட்டுட்டான்னு கை தூக்குனா இவரு இப்படி நினைச்சிகிட்டாறே! நினைச்சிக்கிட்டுமே! இப்ப என்ன ஆயிடுச்சு!" என்று எண்ணிக் கொண்டே அமைதியாக நின்றேன்.

"மச்சி! நந்தினி சரியா டென்ஷன் ஆயிட்டாடா! பாரேன் கோல்டு மெடல் போட்டிக்கு ஒருத்தன் போட்டிக்கு வந்துட்டான்னதும் கோவமா நகம் கடிக்குறதை!" என்ற பின்புற இருக்கையின் கிசுகிசுப்புக் குரல் கேட்டு அப்படியே வலது புறம் திரும்பினேன்.

தன் பெரு விரல் நகத்தைக் கடித்தவாறே கோபமுடன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி.

"அவள்தான் நந்தினியோ?"

"சபாஷ் சரியான போட்டி" மீண்டும் பின்புற இருக்கையிலிருந்து சற்று பலமாகவே வந்த குரல் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது.

தொடரும்....................................!
Author: நாமக்கல் சிபி
•8/08/2007 12:05:00 pm
பகுதி 4

அடுத்து வந்த இரண்டு மாதங்கள் போனதே தெரியவில்லை. பிரிய இருக்கிறோம் என்று கவலையுற்றே பிரியாமலே இருந்தோம். கவலைப் பட்டுக் கொள்வதற்கே சந்தித்தோம். மீண்டும் சந்தித்துக் கொள்வதற்காகவே பிரிந்தோம் அன்றைய பொழுது சாய்ந்ததும்.

தினந்தோறும் நேசத்தின் மழையின் நனைந்தேன். அவ்வப்பொழுது அவளின் கண்ணீர் மழையினிலும்!
ரிசல்சட் வந்த அன்று 97% மதிப்பெண் பெற்றதத அறிந்து என்னை விடவும் அதிகம் மகிழ்ந்தவளும் அவள்தான்! அதை விட அதிகமாய் அழுதவளும் அவள்தான்! அதிகப் படியான மதிப்பெண்கள் எங்களுக்கிடையில் தொலைவை அதிகமாக்கும் என எண்ணியிருந்தாள் போலும்.

"மண்டு! எவ்வளவு தொலைவு போனாலும் நான் உன்னோடதானடி இருப்பேன்?"

"எப்படி?" என்றாள் கண்களை அகல விரித்தபடி. ஒன்றும் தெரியாதவள் போல் நடிப்பதில் கில்லாடி.

"இப்படி" என்றேன்.சட்டென அவள் கை விரல்கள் பற்றி என் இதழோடு சேர்த்து ஒரு முத்தமிட்டேன்.

"ச்சீ! போடா! ஏன் இப்படி என் உசிரை வாங்குறே?" என்றாள்.

"அட! என் உசிரைத்தானடி நான் வா ங்குறேன்" என்றேன்.

"உன்கிட்டே பேசி ஜெயிக்க முடியாது" என்றாள்.

"ஆமாம்! என்கிட்டே பேசி ஜெயிக்க முடியாது" கண்சிமிட்டினேன்.

"போடா பொறுக்கி!" பொய்க்கோபம் காட்டினாள்.

இப்படித்தான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதும், ஒவ்வொரு விதமாய்.

சீண்டிப் பார்த்து சிதறிப் போனோம் . தீண்டிப் பார்த்து திக்குமுக்காடினோம்.

பரிகசித்துக் கொண்டோம். பரிதவித்துக் கொண்டோம்!

பங்குனித் தேர்த்திருவிழாக் கடைகளில் இன்னும் கூட்டம் இருந்தது.
மலைக் கோட்டைக் குளக்கரையில் வண்ண வண்ண பொம்மைகள், வளையல்கள், வீட்டு உபயோகச் சாமான்கள், அப்பளம், மிளகாய் பஜ்ஜி கடைகள்.. திருவிழா முடிந்த ஒரு மாதம் இன்னும் வியாபாரம் நடத்திக் கொண்டிருந்தன.

அவளை கடைக்கு அழைத்து வந்தேன்.

"வேணுங்கறதெல்லாம் வாங்கிக்க!"

"ஒண்ணும் வேணாம்டா எனக்கு"

எனக்குப் புரிந்தது.

நானே எனக்குப் பிடித்த வளையல்களை வாங்கி அவள் கைகளில் மாட்டினேன். அவள் மனசு நெகிழ்ந்தது. வளையல் சுலபமாய் நுழைந்தது!


எதிர்பார்த்திருந்த நாள் வந்தே விட்டது. எதிர்பாராதிருந்த நாளும் அதுதான் என அவள் சொல்லிக் கொண்டாள்.

ஆம்! கவுன்சிலிங்கிற்கான அழைப்பு கடுதாசியில் வந்திருந்தது.

அன்றுதான் அவள் முகம் தொட்டுக் கண்ணீர் துடைத்தேன்!

என் விரல் பற்றி முத்தமிட்டாள்.

அன்றுதான் முதல் முறையாக பிரிவு பற்றி எனக்குள்ளும் கலக்கம் ஏற்பட்டது.

தைரியம் சொல்லிக் கொண்டிருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை இழந்து கொண்டிருந்தேன்.

"என்னை விட்டுப் போயிடாதடா?" கண்ணீருடன் அன்றைய சந்திப்பை முடித்து வைத்தாள்.



தொடரும்...................!

பகுதி - 6
Author: நாமக்கல் சிபி
•8/07/2007 12:31:00 pm
பகுதி - 3

வினாத்தாள் கையில் வந்து சேர்வதற்குள் வியர்வை ஆறாய் ஓடிவிட்டது. கடைசித் தேர்வு இது.
இது வரை எழுதிய அனைத்தும் நன்றாகச் செய்து விட்டேன். இன்று ஏனோ இதயத் துடிப்பு அதிகமாக இருந்தது. ஒரு மார்க் விட்டாலும் கவுன்சிலிங்கில் ரேங்க் மாறும் என்பது தெரியும். அதுக்கு வாய்ப்பு கொடுக்கலாகாது.

வினாத்தாளை வாங்கிப் பார்த்ததும்தான் அப்பாடா என்றாகியது. எல்லாம் தெரிந்த வினாக்கள்தான். நிதானமாகத் திட்டமிட்டு எழுதலாம். பெரும்பாலான வினாக்களுக்கு வரைபடமும், விளக்கமும் இருந்தாலே போதும். மற்றவை நிரல்கள் எழுதுவதுதான். விளக்கமாக எழுதவேண்டியவை சில வினாக்கள் மட்டுமே.

ஐந்து வினாடி கண்களை மூடி ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.

அவள் என் தலை கோதினாள். விரல்களைப் பிடித்துக் கொண்டாள். கண்களில் கண்ணீருடன் முகவாய் தொட்டு என் முகத்தை நிமிர்த்தினாள்.

"டேய்! நிஜமாவே நீ மெட்ராஸ் போயிடுவியா?". என் கண்களிலும் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

"ச்சே! என்ன நினைப்பு இது? என்னை சுதாகரித்துக் கொண்ட நான் என்னை நானே கடிந்து கொண்டேன்.

விறுவிறுவென்று எழுத ஆரம்பித்தேன்.


சரியாக இரண்டரை மணி நேரத்திற்குள் எழுதி முடித்தேன். பத்து நிமிடம் விடைகளைச் சரிபார்த்து தாள்களை இணைத்துக் கட்டி கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தேன்.

நான் வெளியே வந்தபொது எனக்கு முன்பே தேர்வை முடித்துவிட்டு பலர் வெளியே காத்திருந்தனர்.

தோளில் கை போட்டவாறு உடன் நடந்தான் சிவா!

"டேய் சக்தி! இன்னியோட முடிஞ்சுதாடா நம்ம பாலி டெக்னிக் லலஃப்?"

"ஏய் என்னாச்சு! பாலி டெக்னிக் முடிஞ்சா என்னடா? அதான் அடுத்து காலேஜ் படிக்கப் போறமே?"

"அப்பவும் இதே மாதிரி ஒரே காலேஜ்ல, ஒரே கிளாஸ்ல இருப்போமா சக்தி?"

"..."

"என்னடா ஒண்ணும் பேச மாட்டேங்குறே? சொல்லுடா நாம இதே மாதிரி ஒண்ணா இருப்பமாடா?" அவன் குரல் தழுதழுத்தது.

"சொல்லுடா சக்தி" என்று என்று மீண்டும் என்னை உலுக்கினான்.

நான் அழுது கொண்டிருந்தேன்.

துள்ளித் திரிந்த அந்த குதூகலமான நாட்கள் என் நெஞ்சில் வந்து போயின. வகுப்பு நேரம் போக மீதி நேரங்களில் கலாய்த்தலும், காமெடியுமாய்.. என்னையும் சிவாவையும் தனித்தனியே பார்ப்பதே அரிது அந்த நாட்களில்.

மூன்று வருடங்களும் ஒரே வகுப்பு. அடுத்தடுத்த இருக்கை.

எனக்குள்ளும் அந்த கேள்வி எழுந்தது.

"மீண்டும் ஒன்றாய்ப் படிக்க முடியுமா?"

அவனும் சத்தமாக அழத் தொடங்கி இருந்தான்.


தொடரும்...............................................!
Author: நாமக்கல் சிபி
•7/25/2007 11:38:00 am
பகுதி - 2

8.30 மணி ராஜகோபால் பஸ்ஸைப் பிடித்தாக வேண்டும். இப்போதே மணி 8 ஆகியிருந்தது. அவசரமாக இட்லியை விழுங்கிக் கொண்டிருந்தேன். பேருந்து நிலையத்தை அடைய எப்படியும் 15 நிமிடம் நடந்தாக வேண்டும்.

"இன்னும் ஒரே ஒரு இட்லியாவது வெச்சிக்கோடா" என்ற அம்மாவின் குரலைப் பொருட்படுத்தாது, தட்டை வாஷ் பேசினில் போட்டுக் கை கழுவிக் கொண்டு ஷூவை மாட்டலானேன்.

பேருந்து நிலையத்திற்குள் நுழையும்போதே விளம்பர காண்ட்ராக்டரின் ஒலி பெருக்கி தனது வழக்கமான
"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே" என்ற பாடலுடன் தனது பணியைத் துவங்கி இருந்தது.

பாடல் முடிவதற்குள் பேருந்து வந்துவிடும். வழக்கமாக இது நடப்பதுதான். 8.30 மணிக்கு வந்த வேகத்தில் புறப்படும் பேருந்து சரியாக 9.00 மணிக்குள் வண்டி கேட் ஸ்டாப்பிங்கை அடைந்துவிடும்.
இறங்கி ஓட்டமும் நடையுமாக வகுப்பிற்குள் சென்று அமர்வதற்குள் முதல் பீரியட் ஆசிரியர் உள்ளே வந்து விடுவார்.

அடித்து பிடித்து பேருந்திற்குள் ஏறியதும் வழக்கம் போல ஜூனியர் மாணவன் வடிவேலு சீட் போட்டு வைத்திருந்தான்.

வகுப்பிற்குள் நுழையும் முன்னரே
"டேய் சக்தி, பிரின்ஸி ரூமுக்கு வரச் சொல்லி இருக்காங்களாம், போய்ப் பார்த்துட்டு வந்துடு, நேத்து என்ன பண்ணினியோ தெரியலை"

நமட்டுச் சிரிப்புடன் சொன்னான் பாலன்.
கேட்டதும் வியப்பாக இருந்தது.

"அட்டெண்டன்ஸ்லாம் 96%க்கு மேல வெச்சிருக்கேனே" என்ற யோசனையுடன் பிரின்ஸிபால் அறை நோக்கி நடந்தேன்.

அங்கே ஏற்கனவே மற்ற டிபார்ட்மெண்ட்களில் இருந்தும் கூட இன்னும் சில மாணவர்கள் நின்றிருந்தனர். "அட! எல்லாருமே நல்லா படிக்குற பசங்கதான், அப்போ பிரச்சினை ஏதும் இருக்ககது" என்று எனக்கு நானே சமாதானம் ஆனேன்.

எனது டிபார்ட்மெண்ட் சிவாவும் அங்கேதான் நின்றிருந்தான்.
"மச்சான்! பெரிசா லெக்சரர் கொடுக்கப் போறாருன்னு நினைக்கிறேன்"

சிறிது நேரத்தில் காத்துக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் உள்ளே வரச் சொன்னதாக பியூன் வந்து சொன்னார்.

உள்ளே சென்று அவரது டேபிளைச் சுற்றி நின்றோம்.

எல்லோரும் வந்தாயிற்றா எண்று உறுதிப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார் பிரின்ஸிபால்.
"உங்களையெல்லாம் எதுக்கு வரச் சொல்லி இருக்கேன் தெரியுமா? வருஷா வருஷம் நம்ம பாலிடெக்னிக்கிலே டிப்ளமோ படிக்குற பசங்க குறைந்த பட்சம் பத்து பேராவாது நல்ல பெர்சண்டேஜோட வெளிய போயி, கவர்மெண்ட் கோட்டாவிலயே இன்ஜினியரிங்க் காலெஜ்ல சீட் வாங்குறாங்க. அதுவும் கவர்மெண்ட் காலெஜ்லயே ஃபுல் மெரிட்ல போறாங்க!

அந்த வகைல உங்க பெர்பர்மான்ஸ் எல்லாம் நாங்க பார்த்துகிட்டுதான் இருக்கோம்! இது வரைக்கும் நீங்க எல்லாருமே 90 க்கு மேல பெர்சண்டெஜ் வெச்சிருக்கீங்க! இந்த செமஸ்டர்தான் கடைசி செமஸ்டரும் கூட! நீங்க இப்பதான் கவனமா இருக்கணும்!

கொஞ்சம் கூட கவனத்தைச் சிதறவிடாம இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து படிச்சீங்கன்னா நீங்க 95 பர்சண்டேஜ் கண்டிப்பா வாங்கிடலாம்!

அதுதான் நீங்க எங்களுக்கு செய்ய வேண்டியது! எங்களுக்கு மட்டுமில்லை! உங்களைக் கஷ்டப் பட்டு படிக்க வைக்குற உங்க பேரண்ட்ஸ்க்கும் நீங்க செய்ய வேண்டியது இதுதான்! மேல படிச்சி நல்ல வேலைல சேர்ந்து, நிறைய சம்பாதிச்சி கொடுப்பீங்கங்குறது அப்புறம்! இப்ப இருக்குற நிலைமைல மேற்கொண்டு இன்ஜினியரிங் காலேஜ் சேர்க்கணும்னா என்ன செலவாவுமோ, எவ்வளவு செலவாவுமோன்னு அவங்களைக் கவலைப் பட விடாம நீங்க எல்லாரும் மெரிட் கோட்டாவுல சேர்ந்து அவங்களுடைய பாரத்தைக் குறைக்கணும். அதுதான் முக்கியம்! என்ன புரிஞ்சிதா!

இதுதான் உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது. நீங்களும் நல்லா படிங்க! உங்க ஃபிரண்ட்ஸ்க்கும் சொல்லிக் கொடுத்து அவங்களையும் நல்ல மார்க்கோட பாஸ் செய்ய வையுங்க!

ஆல் த பெஸ்ட்!

நீங்க இப்ப போகலாம்"

ஒரே மூச்சில் பேசி முடித்து எங்களை வகுப்பிற்குச் செல்ல அனுமதித்தார்.

தொடரும்............................................................!
Author: நாமக்கல் சிபி
•7/22/2007 10:10:00 am
பகுதி 1

உள்ளங்கையில் துளசியை ஏந்தியவாறே வலம் வந்தோம்.

"ம்க்கும்" தொண்டையைக் கணைத்து என் இருப்பை நினைவூட்டினேன்.

"..."
என்ன என்று கேட்பது போல் தலை திருப்பினாள்.

"எதுனா பேசுறது! ஒண்ணுமே பேசாம போனா எப்படி?"

"கோயில் வந்தது சாமி கும்பிட, உன் கூட பேச இல்லை"

"அது சரி. அப்போ நான் வராம இருந்தா மேடம் ஏன் கோவிச்சிக்கணும்?"

"நீங்களும் கோயிலுக்கு வரணும். ஆனா பேசணும்னு அவசியம் இல்லை, அதான்!"

"அட!"

"சரி சரி! எல்லாரும் பார்க்குறாங்க! பிரசாதம் வாங்க வரிசைல நில்லு"

ஆளுக்கொரு புளியோதரை நிறைந்த தொண்ணையுடன் படிக்கட்டில் இறங்கினோம். ஏறத்தாழ அனைவரும் சென்றுவிட்டிருந்தனர் ஓரிருவரைத் தவிர.

"முண்டம், ஏண்டா லேட்டு?"

"என்னது முண்டமா?"

களுக்கென்னு சிரித்தாள்.

"பின்னே லேட்டா வந்தா ஏங்க மிஸ்டர் லேட்னு கேக்கணுமா?"

"அதுக்காக முண்டம்னு சொல்றதெல்லாம் ஓவர் சொல்லிட்டேன்"

"இதுக்கே இப்படின்னா...!"

"என்ன இதுக்கே இப்படியா? அப்போ இன்னும் என்னவெல்லாம்டி சொல்லுவே?"

"தோ பாரு! இந்த டீ போடுற வேலையேல்லாம் வேண்டாம்"

"பின்னே நீ மட்டும் முண்டம்னு சொல்லுவியா?"

"சரி! விடு! நீ பாட்டுக்கு உன் லேட்டா வந்தா என்ன அர்த்தம், நான் தேடிகிட்டே இருந்தேன் தெரியுமா?"

"ஓ! சாரிப்பா! அதான் வந்துட்டேன்ல! நேத்து கொஞ்சம் அசைன்மெண்ட்ஸ் அதிகம் குடுத்துட்டாங்க! ஃபைனல் இயர் வேற! அதான் எழுதி முடிக்கும்போது மணி 12.30 ஆயிடுச்சு! நல்லாத் தூங்கிட்டேன்"

"அப்போ நல்லாத் தூங்கலையா என் செல்லம்"

"இல்லை! ரேடியோல பாட்டைக் கேட்டவுடன் விழுந்தடிச்சிட்டு எழுந்து குளிச்சிட்டு ஓடியாந்தேன்"

"ம்ம், இப்போ கடைசி வருசம், முடிச்சதும் ஐயாவுக்கு என்ன திட்டமோ? வேலை தேடுறதுதான?"

"என்னது வேலையா" வெறும் டிப்ளமோ முடிச்சிட்டு வேலைக்குப் போனா, உன்னை வெச்சி குடும்பம் நடத்துற அளவுக்கெல்லாம் சம்பாதிக்க முடியாதும்மா! அடுத்து ஐயா எஞ்சினியரிங்க் காலேஜ்ல சேரப் போறேனாக்கும்"

"ஓ! இஞ்சினியரிங்க் காலேஜ் நம்ம ஊர்லே கிடையாதே! வேற ஊருக்குப் போயிடுவியா?"

"ஆமா! ஆனா மூணே மூணு வருஷம்தான்"

"மூணு வருஷமா? ஐய்யோ! எப்படிடா என்னை விட்டுட்டு இருக்கப் போறேன்னு இவ்ளோ கூலா சொல்லுறே? எனக்கு கேட்டவுடனே திக்குங்குது"

"வேற என்ன பண்ணுறது? நான் தூரமா போனாலும் என் மனசுக்குள்ளே நீ இருந்துகிட்டே இருப்பியாம். நான் உன் மனசுக்குள்ளே இருந்துகிட்டே இருப்பனாம், மூணு வருஷம் மூணே நிமிஷமா ஓடிடுமாம், இஞ்சினியரிங் முடிச்சதும் நல்ல வேலைல உக்காரணும். நம்ம கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கணும், நான் உன்னை மகாராணி மாதிரி வெச்சி காப்பாத்துவேனாம்"

"நிஜமாவா! வேற ஊருக்குப் போனதும் என்னை மறந்துட மாடியே"?

"சத்தியமா என் செல்லம்! என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குதுல்ல, நீ வேணா பாரேன் இந்த அரங்க நாதர் கோயில்ல வெச்சி சொல்லுறேன், நமக்கு இதே கோயில்ல வெச்சித்தான் கல்யாணம் தடபுடலா நடக்கும் பாரேன்"

அதே நேரம் கோவில் ஒலிபெருக்கியில்

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்சேவடி செவ்விதிருக் காப்பு."

என்று பாசுரங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

"பார்த்தியா! பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று பெரியாழ்வாரே நம்மை ஆசீர்வதிக்குறா மாதிரி இருக்குதுல்ல" என்றேன்.

சாந்தமான புன்னகையுடன் ஆமோதித்தாள்.

ஆயினும் அவள் கண்களில் கொஞ்சம் கவலை குடி கொண்டிருந்ததை கவனிக்கத் தவறவில்லை நான்.

தொடரும்......................................!

பகுதி - 3
Author: நாமக்கல் சிபி
•7/18/2007 11:24:00 am

"தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்; "

கோவில் ஒலிபெருக்கியில் கசிந்து கொண்டிருந்த திருப்பாவைப் பாடல், என்னை எழுப்பியது.
"அடச் சே! இவ்ளோ நேரம் ஆச்சே! நல்லாத் தூங்கிட்டேனோ"

அவசர அவசரமாய் போர்வையை உதறி எழுந்தேன். பிரஸ்ஸையும் பேஸ்டையும் கையிலெடுத்துக் கொண்டு டவலை எடுத்துத் தோளில் போடுக் கொண்டேன்.

இன்னிக்கு கோவிச்சிக்கப் போறா! எப்படி சமாளிக்கப் போறேனோ!

குளியல் முடித்து பேண்ட், சட்டை மாட்டி வேகமாக தெருவில் இறங்கினேன்.
"அம்மா! கதவைத் தாழ் போட்டுக்குங்க" உட்புறம் நோக்கிச் சொல்லிவிட்டு நடக்கத் துவங்கினேன்.

சில்லென்ற மார்கழிக் காற்று முகத்தில் அறைந்தது. இந்த மார்கழிப் பனியும், சில்லென்ன காற்றும் அனுபவித்து உணர வேண்டியது. சொல்லி உணர வைக்க முடியாது. அதுவும் விடிந்தும் விடியாத இந்த மார்கழியின் அதிகாலைப் பொழுது இருக்கிறதே! ஆஹா! சுகமோ சுகம்! வருடம்தோறும் மார்கழியாய் இருந்தால் என்ன?

கோயில் சென்று சேரும்போது கோவில் ஒலிபெருக்கி

"பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே"
என்று பாடிக் கொண்டிருந்தது.

இதைப் பாடிக்கொண்டிருக்கும் குரல்களில் அவள் குரலும் உண்டு!

பாம்பணையில் பள்ளி கொண்டவனைப் படிகளேறித் தரிசிக்க வேண்டும். வேக வேகமாய் படிகளில் பறந்தேன். அந்தக் குளிரிலும் நெற்றியில் சிறிது வேர்த்தது.

பஜனைக் குழுவை நெருங்கியதும் பாடலைப் பாடிக் கொண்டே சிலர் நிமிர்ந்தனர்.
அனைவருக்கும் பொதுவாய் ஒரு வணக்கம் போட்டுவிட்டு, இன்னும் திறக்காத பரந்தாமனின் கதவுகளை நோக்கியும் ஒரு கும்பிடு போடு விட்டு ஆண்கள் பகுதியில் சென்று அமர்ந்தேன்.

அடுத்த பாடல் ஆரம்பித்தது. எனது குரலும் குழுவினரோடு இணைந்தது.

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து
உன்பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து
நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உன்தன்னோடுஉற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

பாடலை உதடுகள் முணுமுணுத்தவாறே கண்கள் தேட ஆரம்பித்தன!

அதோ அழகிய சிற்ப வேலைப் பாடுகளோடு கூடிய அந்தத் தூணுக்கு அருகே,
ஊதா நிறத் தாவணியும், சற்று ஈரம் காயாத கேசத்தில் முடிந்தௌ வந்த மல்லிகைச் சரமுமாய்..

அட! அவளும் என்னைப் பார்த்துவிட்டாள். பாடலைப் பாடியவாறே ஒரு புன்னகை! யாரும் அறியா வண்ணம்! நானும் புன்னகைத்தேன்!

தொடரும்...........................................!

பகுதி 2

பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!