Author: நாமக்கல் சிபி
•9/24/2008 10:57:00 am
பகுதி 14

"அண்ணே! என்னை மன்னிச்சிடுங்கண்ணே!"
தயங்கி தயங்கி தென்னரசுவின் அருகில் சென்றாள் நந்தினி!

கலைந்த கேசமும், வாரக் கணக்கில் சவரம் செய்யப்படாத தாடையுமாய் கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த தென்னரசு திரும்பிப் பார்த்தான்.

அருகில் தனது தங்கை நந்தினி கலங்கிய கண்களுடன் நிற்பதைப் பார்த்து பதறி எழுந்தான்.

"நந்தினி! வந்துட்டியாடா! என்னை விட்டுட்டுப் போயிட்டியோன்னு துடிச்சிப் போயிட்டேன் தெரியுமா?"

"அண்ணே! உங்களைச் சரியாப் புரிஞ்சிக்காம சண்டை போட்டுட்டேன்! என்னை மன்னிச்சிடுங்கண்ணே!" அவள் விழிகளில் தாரை தாரையார் கண்ணீர் வழிந்தோடியது!

"அட! என்னம்மா இது! இப்பத்தான் என்னைப் புரிஞ்சிகிட்டியில்ல அதுவே போதுண்டா! மன்னிப்பெல்லாம் எதுக்கு!"

உள்ளேயிருந்த தனது மனைவியை அழைத்தான்.

"மஞ்சுளா! நந்தினி வந்துட்டா பாரு! முதல்ல அவளுக்கு காஃபியும் அப்புறம் சாப்பிட டிஃபனும் கொடு! சரியா சாப்பிட்டாளோ என்னவோ"

சிலநாட்களாக அன்றாட அரசியல் வாழ்க்கையை விட்டு சோகமே கதியென்று இருந்த தென்னரசுவிற்கு பழைய தெம்பும் குதூகலமும் திரும்பிவிட்டிருந்தது!

சக்தியை அடிக்க தனது ஆட்களையே ஏவியது என்றும் ஒரே வாரத்தில் அலைந்து திரிந்து கண்டு பிடித்து தனது தங்கையின் முன்னர் கொண்டு வந்து நிறுத்தினார்.

"இதோ இவந்தான்ம்மா எல்லாத்துக்கும் காரணம்! போன உள்ளாட்சித் தேர்தல்ல இவனுக்கு சீட் கொடுக்கலைன்னு வன்மம் வெச்சிருந்து நேரம் பார்த்து விளையாண்டிருக்கான்! ராஸ்கல்"

அண்ணன் தங்கைக்கு இடையில் முன்பு இருந்ததை விட இப்போது பாசம் அதிகரித்திருந்தது! சிறிய இடைவெளி இருவருக்குள்ளும் நிறைய புரிதல்களை
ஏற்படுத்தி விட்டிருந்தது!

நந்தினியும் தனது பின்னணி நிஜங்களை ஓரளவு அறிந்துகொண்டிருந்தாள்! அன்று சக்தி மட்டும் நிஜங்களைச் சொல்லாமல் இருந்திருந்தால் தான் எவ்வளவு நன்றி கெட்டவளாகி விட்டிருக்கக் கூடும் என்று தனக்குத்தானே வெட்கப் பட்டாள்!

இந்த வசதியான வாழ்க்கை, சொகுசு பங்களா, கார்.. இப்படி யாவுமே தனக்கு உரிமையானதல்ல எனினும் தன் அண்ணன் தென்னரசு அப்படி ஒரு எண்ணமே வராமல் தன்னை வளர்த்து வந்த விதம் பற்றியும் எண்ணி எண்ணிக் குமைந்துகொண்டிருந்தாள்!

தென்னரசுவின் பாதங்களில் விழுந்து கண்ணீரால் கழுவ அவள் துடித்தாளும் இவளுக்கும் விஷயம் தெரிந்துவிட்டதென்று தெரிந்தால் தென்னரசு வருத்தமடையக் கூடும் என்றும் சக்தி சொல்லியிருந்த படியாள் தனக்குத் தெரிந்தவாறு காட்டிக் கொள்ளவில்லை!

5 வயதில் திருவிழாப் பண்டிகையில் பெற்றோரைத் தொலைத்துவிட்ட இவளை தென்னரசுவின் பெற்றோர்தான் எடுத்து வந்து வளர்த்தன்ர். அப்போது தென்னரசுவிற்கு 13 வயது! அழுதபடி நின்றிருந்த நந்தினியை தென்னரசுதான் அவனது தந்தைக்கு சுட்டிக் காட்டினான்.

அப்போது முதல் தனது தங்கை தனது தங்கை என்று பாசத்தைக் கொட்டிவந்தான்! அவனது திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே அவனது பெற்றோர்களும் கார் விபத்தில் பலியாகிவிட நாந்தினிக்கு தென்னரசுவே எல்லாமுமாகிப் போனான்.

நந்தினிகு ஒரு திருமணத்தை முடித்து வைத்த பின்னரே தான் குழந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அதைத் தனது மனைவி மஞ்சுளாவிடமும் கூறி புரியவைத்து சம்மதிக்க வைத்திருந்தான்!

"மஞ்சுளா! நந்தினிக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணி வெச்சிடணும்னு நினைக்கிறேன்! நீ என்ன சொல்றே"

"பண்ணிடலாம்ங்க! சீக்கிரமே உங்களுக்குத் தெரிஞ்ச வகையில சொல்லி வைங்க! ஏதாவது மினிஸ்டரோட பையனுக்கே கூட பொண்ணு கேட்டு வருவாங்க"

"மினிஸ்டரெல்லாம் எதுக்குடி! நந்தினியே ஒரு பையனை மனசுக்குள்ளே முடிவு பண்ணி வெச்சிருக்கா! அப்புறம் பிரைம் மினிஸ்டரே வந்தாலும் நான் சம்மதிக்க மாட்டேன்! அவ சந்தோஷம்தான் என் சந்தோஷம்னு உனக்குத் தெரியும்ல!"

அதற்கு மேல் மஞ்சுளா ஒன்றும் பேசாமல் அமைதியாகி விட்டாள்!

-- தொடரும்...

பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!