Author: நாமக்கல் சிபி
•9/10/2006 02:35:00 am
முன் குறிப்பு : சனிக்கிழமை எதிர்பார்த்து வருகை தந்த வாசகர்கள் மன்னிக்கவும். கடினமான வேலலப்பளுவும், கட்டாய ஓய்வு வேண்டுமென்ற என் உடலின் பிடிவாதமும் என்னை நேற்று ஓ.பி அடிக்க வைத்துவிட்டன. அதனால் நேற்று எழுத இருந்த இந்த அமானுஷ்யச் சிறுகதையை இன்று பதிவிட்டுள்ளேன். மேலும் எனக்கே தெரியாமல் எனது வலைப்பூவில் கைப்புள்ளை அவர்கள் கட்டி வைத்த தாயத்தும் அமானுஷ்யங்களை வர விடாமல் செய்துவிட்டது.

ஒற்றைப் புளிய மரம்

Photobucket - Video and Image Hosting

அன்றும் புறப்படுவதற்கு 11 மணிக்கு மேலாகி விட்டது. எனது இருப்பிடத்திற்குச் செல்வதற்குள் எப்படியும் இரவு 2 ஆகிவிடும். அந்த ஒற்றைப் புளிய மரம் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்று நினனக்கும்போதே திக்கென்றது. எனது யமஹாவை உயிப்பித்தேன். சில்லென்ற காற்றுடன் இலேசாகத் தூறலிடத் தொடங்கியது.


முன்பெல்லாம் பல முறை இதே வழியாக எந்நேரமும் பயமின்றி சென்று வந்திருக்கிறேன். அப்புளிய மரத்தின் வரலாறு அறியாதவரை. டீக்கடை மாணிக்கம்தான் ஒரு நாள் கேட்டார்.
"ஏம்பா செல்வராசு, ராத்திரி எந்நேரம்னாலும் புறப்பட்டு போறியே, அந்த ஒத்தைப் புளிய மரம் பத்தி ஏதாச்சும் தெரியுமா?" என்று பீடிகை போட்டவாறே கேட்டார்.

"ஊருக்கு வெளியே தனியா இருக்கே அதுவா? ஏதும் தெரியாதுங்களே, சொல்லுங்க கேப்போம்."
என்றேன் டீயை உறிஞ்சியவாறே.


"அந்தக் காலத்துல மிராசு ஒருத்தனை நம்பி ஏமந்து போன ஏழைப் பொண்ணு சின்னத்தாயி, அவ அந்த மரத்துலதான் தூக்குப் போட்டுகிட்டு செத்துப் போனாளாம், அப்புறமா அந்த மிராசோட குடும்பத்துல இருக்குறவங்க ஒவ்வொருத்தரா துர்மரணத்தை சந்திச்சே அந்தக் குடும்பம் அழிஞ்சிதாம். இப்பக் கூட நேரம் கெட்ட நேரத்துல அந்தப் பக்கமா போயி வந்தவங்க அந்த மரத்துக்குப் பக்கத்துல வித்தியாசமா அழுகிற சத்தம் எல்லாம் கேக்குதுன்னு சொல்லுவாங்க" என்றார்.

அதன் பிறகு எப்படியாவது இரவு நேரங்களில் அந்த வழியே பயணம் செய்வதை முடிந்தவரை தவிர்த்தே வந்தேன். எப்போதேனும் தவிர்க்க முடியாமல் இரவு நேரங்களில் கடந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோதெல்லாம் கூட மனதில் ஒரு கிலி தோன்றுவதைத் தவிர்க்க முடிவதில்லை.


இப்போதும் அப்படித்தான். மனசுக்குள் திக் திக்கென்றுதான் இருந்தது. வண்டியின் வேகத்தை அதிகரித்தேன். அந்தப் புளியமரம் இருக்கும் இடத்திற்கு இன்னும் ஒரு கிலோ மீட்டர் தூரம் தான் இருந்தது. வேகமாகக் கடந்து சென்றுவிட வேண்டும் என்று நினைக்கையில்தான் சட்டென வண்டி மக்கர் செய்தது. திடீரென வேகம் குறைந்து.. அப்படியே உயிரிழந்தது.


"அடச் சே! இன்னிக்கு நமக்கு கெட்ட நேரம்தான் போலிருக்கு.." என்றவாறே இறங்கி வண்டியை சாலையின் ஓரத்திற்கு தள்ளிச் சென்றேன். பயம் மனதின் ஓரத்தில் தெளிவாய் எட்டிப்பார்த்தது.
அடிவயிற்றில் சிலீரென்ற உணர்வு. சில்லென்ற காற்று வீசும் நேரத்தில் கூட நெற்றியில் வியர்வை
வழியத் தொடங்கியது. இருட்டு வேறு. அப்படி இப்படி என்று ஒரு வழியாய் வண்டி சமாதானமானது. இம்முறை கிக் செய்தால் ஸ்டார்ட் ஆகிவிடும் என்ற நம்பிக்கை வந்தது.

வண்டியில் ஏறி அமர்ந்து கிக் செய்தேன்.

"ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ரும்......."
"அப்பாடா...கடவுளே.. நான் வேண்டிக்கொண்ட எல்லா கடவுளுக்கும் நன்றி..."

ஹெட்லைட் வெளிச்சத்தை உமிழ்ந்தது. ஹெட்லைட்டின் வெளிச்சத்தில் ஏதோ ஒரு உருவம் என்னை நோக்கி ஓடி வருவது போல் தெரிந்தது...

"நிஜமா அல்லது பிரம்மையா...."

கண்களைத் தேய்த்துக் கொண்டு பார்த்தேன். நிஜமாகவே என்னை நோக்கிதான் வந்து கொண்டிருந்தது. எனக்குள் இரத்த ஓட்டத்தின் வேகம் பி.டி உஷாவின் ஓட்டத்தை விட அதிகரித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. கிட்டே நெருங்க நெருங்க "ஜல்..ஜல்..ஜல்..ஜல்" என்ற கொலுசின் ஓசையும் தெளிவாகக் கேட்க....

"செல்வராசு இன்னிக்கு உன் கதை கந்தல்டா!..."

என்று எண்னி முடிப்பதற்குள் கண் மண் தெரியாத வேகத்தில் என் மீது மோதி நின்ற அந்த உருவம் சட்டென சுதாகரித்துக் கொண்டு என்னைத் தாண்டி ஓட ஆரம்பித்தது.. இந்த முறை கொலுசின் சத்தத்தோடு சன்னமாக விசும்பலின் ஒலியும் கேட்டுத் தேய்ந்தது.

சில நிமிடங்கள் ஒன்றும் புரியாமல் நின்றிருந்த நான்..திடும்மென சுய நினைவுக்கு வந்தவனாய் வண்டியைக் கிளப்பினேன். அடித்துப் பிடித்து எனது அறைக்கு வந்து சேர்ந்தபோது 2.30 அகி விட்டிருந்தது. வியர்வையால் உடல் தொப்பலாக நனைந்திருந்தது. குளித்து உடை மாற்றிக் கொண்டு உறங்கலாம் என்று சட்டையைக் கழற்றி மாட்டும்போதுதான் கவனித்தேன் இடது தோள்பட்டை பகுதியில் இருந்த ரத்தக் கரையை.


"டேய் செல்வராசு.. என்னடா உடம்பு இப்படிக் கொதிக்குது..ராத்திரி நல்லா மழைல நனைஞ்சிட்டியா..?" என்று நைட் சிஃப்ட் வேலை முடிந்து காலை 8.00 மணிக்கு திரும்பி வந்த எனது நண்பன் என்னை எழுப்பியபோதுதான் கண் விழித்தேன்.




Post a Comment
This entry was posted on 9/10/2006 02:35:00 am and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 விமர்சனங்கள்:

பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!