Author: நாமக்கல் சிபி
•3/03/2009 12:08:00 pm

முதல் பகுதி

"சுவாமி"

குரல் கேட்டு தியானத்திலிருந்து விடுபட்டுக் கண்விழித்தார் நித்தியானந்தர்! இடுப்பில் சுற்றியிருந்த காவி வஸ்திரமும் விபூதிப் பட்டைகள் அணிந்த திருமேனியுமாய் முகத்தில் நிறைந்திருந்த பேரமைதியும், மேனியை அலங்கரித்த ருத்திராட்ச மாலைகளும் சித்தர் என்னுமளவிற்கு உண்டான தேஜஸ் கொண்ட முகப் பொலிவும் கண்களுக்குள் குடிகொண்டிருந்த சாந்தமும் பார்த்தவுடன் கைகூப்பித் தொழச்செய்பவையான தோற்றம் அவருடையது!
எத்தனை வயதைக் கடந்திருப்பார் என்று எளிதில் கணக்கிட்டுவிட முடியாது!

தலையில் முடிந்த நரைத்த ஜடாமுடியை வைத்து வேண்டுமானால் எண்பதைக் கடந்திருப்பார் என்று கூற முடியும்!

எதிரே பணிவாய் நின்றிருந்த சுந்தரேசனை புன்முறுவலுடன் நோக்கினார்!
"என்ன சொல்ல வருகிறாய்" என்று அவரது பார்வை கேட்டது!

"சுவாமி! ஒரு சந்தேகம்!" என்றான் சுந்தரேசன்!
"கேள்"
"இப்படி விபரீத சிந்தனைகளுடன் தீய சக்திகள் செயலாற்ற முனைந்திருக்கும்போது அவற்றைத் தடுப்பது எப்படி? மனித இனத்திற்கு தீங்குகள் விளையும் அல்லவா? அவர்களிடமிருந்து அப்பாவி மக்களைக் காப்பது எப்படி சுவாமி"

"ஹெஹெ!" மந்தகாசப் புன்னகையுடன் சிறிது மௌனம் சாதித்தார்!

"சுந்தரேசா! எப்பொழுதெல்லாம் தெய்வ சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு அற்ப மானிடர்கள் விபரீத விளைவுகளை ஏற்படுத்த எத்தனிக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் இறைவன் தன்னால் அனுப்பப்பட்ட மானிடர்கள் மூலமே அவர்களைத் தடுத்து தண்டித்து பிறரைக் காக்கவும் செய்கிறான் என்பதை அறிந்ததில்லையா நீ"

"அது உண்மைதான் சுவாமி! ஆனால் நீங்கள் சொல்லிய இத்தகைய தீயவர்கள் சாதாரண மனித சக்திகளுக்கு அப்பாற்பட்டு மந்திர தந்திர சக்திகளால் தீங்கு விளைவிக்க இருக்கிறார்களே! இவர்களிடம் சாதாரண மானிடரால் எப்படி போரிட முடியும்? இறைவனே அல்லவா அவதரிக்க வேண்டும்"

"ம்! இறைவனின் படைப்பில் எத்தனையோ விநோதங்கள் உண்டு! இவர்களை வெல்லுமளவிற்கு மந்திர தந்திர திறமைகளுடன் இனிமேலா இறைவன் படைக்கப் போகிறான்! ஏற்கனவே படைத்து விட்டிருக்கிறான் சுந்தரேசா!
அவன் விரைவில் இங்கே வரவேண்டும்! அவனது பணி இங்கிருந்தே தொடங்க வேண்டும் என்பது எழுதப் பட்டிருக்கிறது!"

"அம்மானுடன் இன்னும் தன்னை உணராத நிலையில் இருக்கிறான்! உணர்ந்தபின் அவனது பணி அவனுக்கு உணர்த்தப் படும்! அவனுக்கு அழைப்பு நேற்றே அனுப்பப்பட்டு விட்டது என்பதை அறியமாட்டாய் நீ"

"ஆஹா! அப்படியெனில் நிம்மதியாய் இருக்கிறது சுவாமி!"

"சுந்தரேசா! உலக உயிர்களுக்காக உன் மனம் கொள்ளும் கவலை எனக்கு ஒருபுறம் மகிழ்வை அளித்தாலும் உலக நிகழ்வுகள் உன்னை சஞ்சலத்துக்கு உள்ளாக்கும் வண்ணம் இன்னும் நீ பக்குவப் படாமால் இருக்கிறாயே என்று என் உள்ளம் துணுக்குறுகிறது"

"என் செய்வது சுவாமி! தீய சக்திகள் அழிவுப் பணிக்கான ஆராய்ச்சிகளைத் தொடங்கிவிட்டன என்று நீங்கள் சொன்ன கணத்திலிருந்தே என் மனதில் கவலை குடி கொண்டு விட்டது! தவறெனில் மன்னியுங்கள் சுவாமி"

"ம்ஹூம்! இது உன் தவறல்ல சுந்தரேசா! இன்னும் சில காலம் ஆகும்! சஞ்சலங்களில் இருந்து உன்னை நீ விடுவித்துக் கொள்ள! சரி! நேரமாகிவிட்டது!
என்னுடன் வா! சில மூலிகைகள் தேட வேண்டிய வேலை இருக்கிறது!"
என்று கூறியவாறு எழுந்து குடிலின் வேலியைக் கடந்து அந்த காட்டுப் பகுதிக்குள் ஒற்றையடிப் பாதையில் நுழைந்தார் நித்தியானந்தர்! அவரைப் பின் தொடர்ந்து சென்ற சுந்தரேசன் சில அடிகள் கடந்து ஒரு பெரிய ஆலமரத்தைக் கடக்கும்போதுதான் நிமிர்ந்து பார்த்தான்..

மரத்தில் விழுதொன்றில் விநோதமான ஒரு துணிப்பையொன்று கட்டப் பட்டிருந்தது! தினமும் கடந்த போதெல்லாம் பார்த்ததில்லை! புதிதாக இருந்தது!

"சுந்தரேசா" நித்தியானந்தரின் குரல் கேட்டு மீண்டும் கவனத்தைப் பாதையில் செலுத்தி வேகமாக அவரைப் பின்தொடர்ந்தான்!


இவர்களின் பாதையில் எதிர்புறம் இருந்து விறகு பொறுக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்த பெண்கள் மூவர் தங்கள் தலையிலிருந்த விறகுச் சுமைகளைக் கீழே வைத்துவிட்டு

"கும்புடுறேன் சாமி" என்று அவர் காலில் விழுந்து வணங்க
"ம்ம்! நலமுடன் வாழ்க" என்று ஆசீர்வதித்து அவர்களுக்கு தன் மடியிலிருந்து விபூதியை எடுத்து வழங்கினார் நித்தியானந்தர்!

"என்னம்மா! காய்ந்த குச்சிகளைத்தானே பொறுக்கிக் கொண்டு போகிறீகள்? மரம் செடிகளில் கை வைப்பது இல்லையே" என்று சிரித்தவாறே கேட்டார்.

"ஐயயோ! அப்படியெல்லாம் செய்வமா சாமி! காஞ்ச குச்சிகளைத்தான் எடுக்குறோம்! நீங்க சொன்னமாதிரித்தான் நடந்தாத்தானே எங்க பொழப்பு பிரச்சினையில்லாம போகும்"
கொஞ்சம் வாயாடிப் பேசும் பெண்ணொருத்தி முன்வந்து பேசினாள்! மீதமிருவரும் மௌனமாக நின்றார்கள்!

"ம்ஹூம்! நல்லது! அங்கப்பன் மகள் செல்லாயி மௌனத்தில் ஏதோ மர்மர் இருப்பது போல் இருக்கிறதே" என்று நித்யானந்தர் மர்மப் புன்னகையுடன் கேட்க
விக்கித்து நிமிர்ந்தாள் செல்லாயி!
Author: நாமக்கல் சிபி
•3/03/2009 09:24:00 am
முதல் நாள் கல்லூரிக்குள் நுழைந்தபோது முதலில் கண்ணில் தென்பட்டவள் அவள்தான் அன்பரசி! அழகான ராட்சசி, தேவதை, நடமாடும் தென்றல் என்றெல்லாம் வர்ணிக்கும் அளவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஃபிகர் எல்லாம் இல்லை! கல்லூரி மாணவர்களுக்கே உரிய பாஷையில் சொல்ல வேண்டுமெனில் அட்டு ஃபிகர்! அதைச் சொன்னதற்குக் கூட புதுசாய்ச் சேர்ந்த கூட்டாளி தினேஷ் என்னைக் கிண்டலடித்தான்! அப்பக் கூட இதை ஃபிகர் என்று சொன்ன முதல் ஆள் நான் தான் என்று!

லைப்ரரி எங்கே இருக்கு என்று கேட்டபோது அளவான புன்னகையுடன் கைகாட்டினாள். "அதோ அந்தப் பக்கம்"

பின்னர் நாட்கள் சென்றுகொண்டிருந்தன! அவ்வப்போது தலை நிமிர்ந்து பார்த்தால் சிறு புன்னகை! அவ்வளவே! யாருடனும் எளிதில் சிரித்துப் பேச மாட்டாள்! நண்பர்களுக்குள் பேசிக் கொள்வார்கள்! "டேய் அவளா பேசணும்னு எதிர்பார்க்கிறே! அவ ஒரு விடியா மூஞ்சிடா"

அவளுக்கும் ஒருவன் காதல் கடிதம் நீட்ட அதை வாங்கிய அவள் மிகவும் பொறுப்பாக மெனக்கெட்டு எழுதி முடித்த அசைண்மெண்டைப் போல் விடுதி வார்டனிடம் சமார்த்தாகக் கொண்டு போய் சமர்ப்பித்தாள்! அவன் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தார்களோ இல்லையோ எங்களின் கிண்டல்களால் வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்தான்!

"மச்சி! நீ வார்டனுக்கு லவ் லெட்டர் எழுதியிருந்தேன்னா கூட பெருமைப் பட்டிருப்பேண்டா! கரெக்டான ஆள் மூலமா கொடுத்தனுப்பிட்டியேன்னு உன் புத்திசாலித்தனத்தை வரலாற்று புத்தகத்துல எழுதி வெச்சிருபோம்! போயும் போயும் இவளுக்கு லெட்டர் எழுதி எங்க மானத்தையும் வாங்கிட்டியேடா"

இப்படியே ஆளுக்கு ஆள் அவளை ஓட்டிக் கொண்டிருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல அவளும் கொஞ்சம் கொஞ்சமாய் மெருகேறிக் கொண்டே வந்ததுபோலிருந்தது எனக்கு!

எங்களுடன் நன்றாகப் பழகிய சில மாணவிகள் கூட அவளிடம் கொஞ்சம் டிஸ்டண்ட் வெச்சிக்கோ என்றே கூறியிருந்தார்கள்! ஆனாலும் ராஜி மட்டும் கொஞ்சம் குளோசாக அவளுடன் பழகிக் கொண்டிருந்தாள்! அருகருகேதான் அமர்வார்கள்!

"ஹே ராஜி! எங்க இன்னிக்கு உன் ஃபிரண்டு காணோம்?"

"ஏன் உதை வேணுமா உனக்கு? அவளைப் பார்க்காம இருக்க முடியலையா? எல்லாம் திமிரு"

கம்ப்யூட்டர் லேபில் டாஸ் மெசேஜ் மூலமாக ஒரு நாள் செய்தி அனுப்பினேன்!
"ஹாய்! ஹவ் ஆர் யூ?"
கம்ப்யூட்டரில் ஐபி மட்டுமே தெரியும் என்பதால் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்! பின்னர் அமைதியாக அமர்ந்து கொண்டாள்!

நான் ராஜியை அழைத்தேன்!
"ராஜி! ஹாய் ஹவ் ஆர் யூன்னு ஒரு மெசேஜ் அனுப்பினேன் கோவிச்சிக்க மாட்டேளே!"

"நீ எவ்ளோ தடவை சொன்னாலும் அடங்க மாட்டே! அவளோட அப்பாவை கூட்டிட்டு வரப் போறா! உதை வாங்கித்தான் அமைதியாவே நீயி!" சன்னமான குரலில் எச்சரித்தாள் ராஜி!

"ஐயயோ! அப்போ அவகிட்டே நான்தான் அனுப்பினேன்னு சொல்லிடு! அப்படியே ஸாரி சொன்னேன்னும் சொல்லிடு"

தலையாலடித்துக் கொண்டு எழுந்து அவளருகே சென்றாள்.

சிறிது நேரத்தில் எனக்கும் மெசேஜ் வந்தது!

"ஃபைன், நோ நீட் ஆஃப் ஸாரீஸ்"

"அட" என்று வியந்து கொண்டேன்! எழுந்து நின்று பார்த்தேன்! புன்னகைத்தாள்!

இப்பொழுதெல்லாம் ராஜியுடன் இருக்கும் நேரங்களில் என்னுடனும் அவ்வப்போது சிரித்துப் பேசுகிறாள்! அவ்வப்போது என் மனசுக்குள் வந்து சென்றது! ஆரம்பத்தில் நான் செய்த வர்ணனை " அட்டு ஃபிகரு"


எலக்ட்ரானிக்ஸ் லேபில் என் பேட்சில் இரண்டு பெண்கள் இருந்ததாலும், அன்பரசியின் பேட்சில் அவள் மட்டுமே பெண் என்பதாலும் லெக்சரரிடம் கேட்டு எனது பேட்சிற்கே மாறிக்கொண்டாள்!

அன்று எங்கள் லதா மேடம் ஒரு சர்க்யூட் பற்றி எங்கள் பேட்சிற்கு விளக்கம் அளித்துக் கொண்டிருக்க

நாங்களிருவரும் சற்றுத் தள்ளி பேசிக் கொண்டிருந்தோம்!

"தண்ணி அடிச்சா மயக்கமா வருமா? எப்படி இருக்கும்" இது அவள்

"ஆமா! அதாவது அப்படியே பூமியிலேயே பறக்குற மாதிரி இருக்கும்! நம்ம வெயிட்டே நமக்குத் தெரியாது! ஒரு மாதிரி கிறக்கமா இருக்கும்!"

"எதுக்காக அதுலே கூல்ட்ரிங்க்ஸ் கலந்துக்குறாங்க! அப்படியே குடிச்சா என்ன ஆகும்?"

"அப்படியேவும் சில பேரும் குடிப்பாங்க! ஆனா ஆல்கஹால் ஸ்ட்ராங்கா இருக்கும்! வயிறு எரியும்! கெமிஸ்ட்ரி லேப்லே ஆசிட்லே தண்ணி கலந்தா எஃபெக்ட் குறையுமல்ல அது மாதிரி"

அவள் விழிகள் வியப்பில் விரிந்தன! எனக்கு அப்போதும் கூட ஏனோ அவள் அழகாகத் தெரிந்தாள்!

அதற்குள் எங்கள் மேடம் நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை கவனித்து விட

"இதுக்குத்தான் அந்த பேட்சிலேர்ந்து இந்த பேட்சுக்கு மாறி வந்தியா?...." என்று திட்ட ஆரம்பிக்க தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்!

"ஹேய் ஹே! எதுக்கு இப்ப அழறே நீ! என்னைக் கூடத்தான் திட்டினாங்க! என்னைப் பாரு! நான் அழுதனா?"

ராஜி முறைத்துக் கொண்டிருந்தாள்!

"இங்க பாருப்பா! பேசினோம்னு மட்டும் தெரிஞ்சிதான் திட்டினாங்க! இன்னும் என்ன பேசினோம்னு தெரிஞ்சிருந்தா என்ன நடந்திருக்கும்னு நினைச்சிப்பாரு"
என்று சமாதானப் படுத்தினேன்!

"இனிமெ மேடம் திட்டினதுக்கெல்லாம் அழக் கூடாது! அமைதியா தலையை குனிஞ்சி நின்னுகிட்டிருந்தா போதும்! வாய் வலிக்க ஆரம்பிச்சதும் அவங்களா நிறுத்திடுவாங்க! என்ன" என்றபோது க்ளுக் என்று சிரித்தாள்!

அன்று மதிய உணவு வேளையில்
"நான் கொண்டு வர சாப்பாடெல்லாம் சாப்பிட மாட்டீங்களா" என்றாள்.

"ஏன் சாப்பிடாம! கொடுத்தா சாப்பிடுவோம்!" என்றேன்!

"சரி கையை நீட்டுங்க"

ஒரு கை சாதம் எடுத்து என் கையில் வைதுக் கொண்டே கேட்டாள்! ராஜி உங்களை அண்ணான்னு சொல்லுறா? நானும் உங்களை அண்ணான்னு சொல்லாமா?

"ஹக்!" சோறு தொண்டையிலேயே சிக்கி நின்று கொண்டது!
ராஜி தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள்!

"அம்மா தாயே! ஒரு தங்கச்சியை வெச்சிகிட்டே நான் படுற பாட்டை சொல்லி மாளாது! நீ வேற வேணாம் தாயே!" சிரித்துக் கொண்டே சொல்லி மழுப்பினேன்!

ராஜி என்னை பாவமாகப் பார்த்தாள்! நான் சட்டென அங்கிருந்து நகர்ந்து கொண்டேன்!

சங்கமம் - போட்டிக்காக : தலைப்பு "கல்லூரி"
Author: நாமக்கல் சிபி
•2/27/2009 09:30:00 am

நந்தா என்கிற நந்தகோபால் விமான நிலையத்தை நெருங்குவதற்குள் மணி இரவு 11 ஆகிவிட்டிருந்தது. காரை பார்க் செய்துவிட்டு விரைந்து உள்ளே சென்றான். சரியாக 11.20 க்கு விமானம் வந்திறங்கிவிடும். நியூயார்க்கிலிருந்து வரும் ஜெட் ஏர்வேஸ் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தின் ஓடுபாதையை முத்தமிட்டபோது நந்தா வரவேற்புப் பகுதியை அடைந்திருந்தான்.

வெகுநேரம் காக்க வைக்காமல் உற்சாகமான புன்னகையுடன் வெளிவாசலை நோக்கி நடந்தார் புரஃபசர் ஷர்மா! ஐம்பதைத் தொடும் வயதை அறிவிக்கும் வண்ணம் அவரது முன்னந்தலையில் காணாமல் போயிருந்த கேசமும், பின்னந்தலையின் நரையும் பளிச்சென வெளிப்பட்டிருந்தன. இருப்பினும் வயதை ஒவ்வாத சுறுசுறுப்பு அவரது நடையில் தெரிந்தது! அவருடன் உதவியாளினி ஆனந்தியும் பின் தொடர்ந்து கொண்டிருந்தாள். இருபத்தைந்தைக் தைத் தாண்டியிருக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நம்ப மறுத்தாலும் இருபத்தெட்டைக் கடந்து இரு வாரங்கள் ஆகிவிட்டிருந்தன என்பதே உண்மை!

வரவேற்புப் பகுதியை அடைந்தவுடன் தேடுவதற்கு வாய்ப்பளிக்காமல் "மிஸ்டர் ஷர்மா" என்று குரல் கொடுத்தான் நந்தா. பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டே விமான நிலையத்தை விட்டு வெளியேற லேப்டாப் மற்றும் இதர பெட்டிகளை டிராலியில் வைத்து உருட்டிக் கொண்டு பின் தொடர்ந்தாள் ஆனந்தி!

அவர்கள் மூவரையும் நிரப்பிக் கொண்டு நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையிலுள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டல் நோக்கி புறப்பட்டது கார்!

சாலையில் கவனத்தை வைத்து ஓட்டிக் கொண்டே வினவினான் நந்தா!
"பயணம் எப்படி இருந்தது மிஸ்டர் ஷர்மா? ஒன்றும் சிரமங்கள் ஏற்படவில்லையே?"

"வெரி நைஸ் யங்க் மேன்! இனிமையான பயணம்! இன்னும் சொல்லப் போனால் அந்த பெனிசுல்வேனியப் பல்கலைக் கழகத்தில் கழித்த 4 நாட்களுமே மிக அருமையாகக் கழிந்தன! நல்ல பல மனிதர்கள், ஆர்வம் மிக்க மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுடனான கலந்துரையாடல், விருந்து என்று ஒரே அமர்க்களமாக இருந்தது!"

இரவு நேரக் நெரிசலற்ற சாலையில் முப்பது நிமிடங்களில் ஹோட்டல் வளாகத்தில் கார் நுழைந்தது!

"ஓகே மிஸ்ட ஷர்மா! நன்கு ஓய்வெடுங்கள்! மீண்டும் நாளை மதியம் வந்து உங்களைத் தொடர்பு கொள்கிறேன்! குட் நைட்!"
"மிஸ் ஆனந்தி! நீங்களும் நன்கு ஓய்வெடுங்கள்! குட் நைட்" என்று விடைபெற்றான் நந்தா!

கார்பார்க்கிங்கை நெருங்கி நேரம் பார்க்கையில் மணி 2 ஆகிவிட்டிருந்தது!
கார் டாஷ் போர்டைத் திறந்து பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி பற்ற வைத்தான்! பார்க்கிங் காவளாளியின் சம்பிரதாய சலாம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு காரை வெளியே எடுத்தான்.

காரின் ஸ்டீரியோவை ஆன் செய்து தனக்கு பிடித்த மெலோடீச் கலெக்ஷனை ஓடவிட்டான்! ரம்யான அந்த மெலோடி பாடல்களுக்கு நடுவே சிறிது நேரமே சந்தித்த ஆனந்தி அவன் நினைவில் வந்து வந்து சென்றாள்.

ஸ்டீரியோவின் மெலோடியஸில் குழைந்த சன்னமான எஸ்.பி.பியின் குரலையும் தாண்டி அவன் காதுகளில் கணீரென்ற குரலில்

"சூடப்பா சந்திரனார் மூன்றேழ் ஐந்து
சுத்த இந்து பதினொன்றில் தனித்திருக்க
மாடப்பா மந்திரங்கள் செய்வான் காளை
மகத்தான வாதமொடு வைத்தியம் செய்வான்"

என்று ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாகப் புரியும் வண்ணம் மெதுவாக நிதானமாக அழுத்தம் திருத்தமாக ஏதோ ஒரு செய்யுளை சொல்லிக் கொடுப்பது போல் அவனது செவிகளில் கேட்டது!

தொடரும்..................!
Author: நாமக்கல் சிபி
•2/12/2009 01:54:00 am


"என்னடா சொல்றே! நீ சொல்றது நிஜமா? அப்போ அந்த பொறம்போக்கு என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லையா?"


"ஆமாங்க தலைவரே! அந்தப் பையன் அவங்க ஊர்லயே ஒரு பொண்ணை விரும்பிகிட்டிருக்கான்! அந்தப் பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறான்! இப்போ அவங்க வீட்டிலயும் பச்சைக் கொடி காட்டிட்டாங்க!"


"ம்! என் தங்கச்சி விரும்பிட்டாங்கற ஒரே காரணத்துக்காகத்தான் அவன் மேல கை வெக்காம விட்டிருந்தேன்! எப்போ அவன் என் தங்கச்சியை விட்டுட்டு வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு தெரிஞ்சிதோ, அவனை உயிரோட விட்டு வெக்க என் மனசு இடம் கொடுக்கலை! நம்ம முரளியை வந்து என்னை பார்க்கச் சொல்லு! அப்படியே அந்தப் பையனோட ஃபோட்டோ ஒண்ணு எனக்கு வேணும்!

.....................................................................................................................................................................

"அண்ணே! நான் காலேஜுக்கு கிளம்புறேன்"
அவசர அவசரமாக நந்தினி புறப்பட்டுக் கொண்டிருந்தாள்!

"அட! என்னம்மா இது! டிஃபன் கூட பண்ணாம! சாப்பிட்டுட்டுப் போம்மா! மஞ்சுளா நந்தினிக்கு டிஃபன் கூட எடுத்து வைக்காம என்ன பண்ணிகிட்டிருக்கே அங்கே?"

சமையலைறை நோக்கிக் குரல் கொடுத்தான் தென்னரசு!

"அண்ணே! ப்ளீஸ் காலேஜ் கேண்டீன்ல போயி பார்த்துக்கிறேன்! அண்ணி நிதானமா சமைச்சி உங்களுக்கு கொடுப்பாங்களாம்! நீங்க சமர்த்தா சாப்பிடுவீங்களாம்! நான் இப்போ காலேஜ்க்கு கெளம்புவேணாம், சரியா"

கொஞ்சலாகக் கேட்டாள்.

"சரி! பார்த்துப் போம்மா! நல்ல பொண்ணுடா!" தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டே வழியணுப்பி வைத்தான்.


சரியாக இரண்டு வருடங்கள் கழித்து..........................................................

தனது செல்ஃபோன் ஒலிக்க காதருகே கொண்டு சென்றான் சக்தி!

"என்ன! இப்பவா! ஹாஸ்பிடல் கொண்டு போயாச்சா! இதோ இப்பவே கிளம்பி வரேன்"..

திடுமென டென்ஷன் கூடிப்போனது! அவசர அவசரமாக தனது மேலாளரிடம் கூறி விட்டு அலுவலக வாசலில் இருந்த தனது மோட்டார் சைக்கிளை உயிர்ப்பித்தான்!

மருத்துவமனை ரிஷப்ஷனில் அறை எதுவென விசாரித்துக் கொண்டு உள்ளே சென்றான் சக்தி!

அவனது பெற்றோர்கள் மற்றும் சுகந்தியின் பெற்றோர்களும் சிறிதளவு பதட்டம் குறைந்து ரிலாக்ஸாக பேசிக் கொண்டிருந்தார்கள்! சக்தி உள்ளே வந்ததும் அனைவரும் அறையை விட்டு வெளியேறினர்.

"என்னடா! ரொம்ப வலி எடுத்துடுச்சா!"
"ம். எங்க நீங்க வராம ஆஃபீஸ்லயே இருந்துடுவீங்களோன்னு கவலையாயிடுச்சு தெரியுமா! "

தலையைத் தடவி விட்டான்!

"நான் வராம இருப்பனா சுகந்தி! நீ என் உசிராச்சே! இப்போ என் இன்னொரு உயிரையும் சுமக்குறே! இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த உயிரையும் கைல கொடுக்கப் போறே! இந்த நேரத்துல கண்டிப்பா நான் உன் கூட இல்லாம எங்கடா போயிடுவேன்"

"என்னங்க! நமக்குப் பிறக்கப் போறது ஆணா பெண்ணா?"

"எதுவா இருந்தாலும் நமக்கு ஓகே சுகந்தி!"

"எனக்குப் பொண்ணுதான் பிறக்கணும்னு ஆசையா இருக்குங்க சக்தி!"

"அப்ப கண்டிப்பா பொண்ணுதான் பிறக்கும்! ஆமா பொண்ணு பிறந்தா என்ன பேர் வைக்கலாம்னு யோசிச்சிருக்கே!"

"நான் என்ன பேர் வைக்கணும்னு சொல்வேன்னு தெரியாதா உங்களுக்கு!"

"இப்ப எனக்கு எதுவும் யோசிக்கத் தெரியலைடா! நீயே சொல்லிடேன்!"

மெதுவாக சக்தியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்! அவளது கண்கள் கொஞ்சம்போல கலங்கியது!

"நம்ம பொண்ணுக்கு நந்தினின்னு பேர் வைக்கணுங்க சக்தி!"

"ஹேய்! என்ன இது இப்பப் போயி கண் கலங்குறே!"

மனசுக்குள் அவனுக்கும் கொஞ்சம் பாரமானது! ஆனால் வெளியில் காட்டிக் கொள்ள வில்லை!

அதற்குள் அந்த அறைக்குள் வந்த நர்ஸ் இருவர் "சார்! நீங்க வெளியே போயி இருங்க! டைம் ஆச்சு! இவங்களை ஆபரேஷன் தியேட்டர்க்கு கூட்டிட்டுப் போகணும்" என்றார்கள்!

பழைய நினைவுகள் சக்தியின் மனதில் நிழலாடத் துவங்கின!

கல்லூரி கேண்டீனில்
"சக்தி! எப்படியோ உங்க வீட்டுல கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாங்க போல! கங்க்ராட்ஸ் சக்தி" என்றாள் நந்தினி!

"ஆமா நந்தினி! ஒரு வழியா சுகந்தியை அறிமுகப் படுத்தி வெச்சி பர்மிஷன் வாங்கிட்டேன்! அம்மாவுக்கு சுகந்தியை ரொம்பவே பிடிச்சிப் போச்சு!"

காபி கோப்பையை மேசையில் வைத்துவிட்டு கேண்டீனை விட்டு வெளியேறி வகுப்பை நோக்கி நடந்தனர்!

திடீரென யாரோ ஓடி வருவது போலத் தோன்ற சட்டெனத் திரும்பினாள் நந்தினி!

அதற்குள் ஓங்கிய அரிவாள் ஒன்று சக்தியின் பின்புறக் கழுத்தை நோக்கி வெகு வேகமாக நெருங்க.. சட்டென சக்தியின் விலாவைப் பிடித்து நந்தினி தள்ளிவிட்டாள்!

"சக்தீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ............"

சக்தி சுதாகரித்து திரும்புவதற்கு எடுத்துக் கொண்ட ஒரே விநாடி்ப் பொழுதில் நடந்து முடிந்திருந்தது!

"டேய்!...." ஓடிவருவதற்குள் வேட்டியும் கைலியுமாய் வந்திருந்த கும்பல் ஓரே ஓட்டமாக ஓடி விட்டிருந்தது!

"நந்தினி...நந்தினி...." அலறிக் கொண்டிருந்தான் சக்தி!

கழுத்தில் வெட்டுப் பட்ட நந்தினி கொஞ்சம் கொஞ்சமாக உயிரை இழந்து கொண்டிருந்தாள்!


"குவா...குவா.." என்ற குழந்தையின் அழுகுரல் சக்தியை நிகழ்காலத்திற்கு மீட்டு வந்தது! ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியே வந்த டாக்டர் சண்முகவடிவு சக்தியை நெருங்கினார்.

"கங்க்ராஜுலேஷன்ஸ் சக்தி! சுகந்தி ஆசைப் பட்ட மாதிரியே பொண்ணுதான் பிறந்திருக்கா உங்களுக்கு! இன்னும் அரை அவர்லே சுகந்தி கண்னு முழிச்சிடுவாங்க நீங்க போயி பார்க்கலாம்.."

மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்கு முக்காடிப் போயிருந்த சக்தி, சுகந்தி ஆகியோருக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கியே இருந்தன!

"சொன்ன மாதிரியே என் மருமவ பொண்ணைப் பெத்துக் குடுத்துட்டா! சக்தி!

என் பேத்திக்கு என்னடா பேரு வைக்கப் போறே!"

"நந்தினி" என்றான் சக்தி!

அருகிலிருந்த பெருமாள் கோவில் ஒலி பெருக்கியிலிருந்து சன்னமாக நாலாயிர திவ்யப் பிரபந்த வரிகள் கேட்டன.

"பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியைச் சார்ங்கமெனும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுச்சித்தன் விருமபியசொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணா வென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத் தேத்துவர் பல்லாண்டே"


-:முற்றும்:-

அனைத்துப் பகுதிகளின் தொகுப்பு
Author: நாமக்கல் சிபி
•1/07/2009 06:28:00 am

நிலையானவை அல்ல
உறவுகள்
அவை
வருவதும் போவதுமாய் இருப்பவை!
உண்மையும் பொய்களுமாய் இருப்பவை.
சிவம் என்னும் பேரானந்தம் மட்டுமே
சத்தியமானதும் நிலையானதும் நிறைவானதும் .

- சுவாமி பித்தானந்தா

நாலாம்பிறை என்ற புதிய தொடர் இத்தனி வலைப்பூவிலிருந்து தொடங்கும். இனி எனது சிறுகதை மற்றும் தொடர்கதைகள் யாவும் இவ்வலைப்பூவிலேயே பதிவு செய்யப் படும்!

தொடரும் அன்பான ஆதரவுகளுக்கும், என்னை மெருகேற்றும் விமர்சனங்களுக்கும் மிக்க நன்றி



Author: நாமக்கல் சிபி
•9/24/2008 10:57:00 am
பகுதி 14

"அண்ணே! என்னை மன்னிச்சிடுங்கண்ணே!"
தயங்கி தயங்கி தென்னரசுவின் அருகில் சென்றாள் நந்தினி!

கலைந்த கேசமும், வாரக் கணக்கில் சவரம் செய்யப்படாத தாடையுமாய் கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த தென்னரசு திரும்பிப் பார்த்தான்.

அருகில் தனது தங்கை நந்தினி கலங்கிய கண்களுடன் நிற்பதைப் பார்த்து பதறி எழுந்தான்.

"நந்தினி! வந்துட்டியாடா! என்னை விட்டுட்டுப் போயிட்டியோன்னு துடிச்சிப் போயிட்டேன் தெரியுமா?"

"அண்ணே! உங்களைச் சரியாப் புரிஞ்சிக்காம சண்டை போட்டுட்டேன்! என்னை மன்னிச்சிடுங்கண்ணே!" அவள் விழிகளில் தாரை தாரையார் கண்ணீர் வழிந்தோடியது!

"அட! என்னம்மா இது! இப்பத்தான் என்னைப் புரிஞ்சிகிட்டியில்ல அதுவே போதுண்டா! மன்னிப்பெல்லாம் எதுக்கு!"

உள்ளேயிருந்த தனது மனைவியை அழைத்தான்.

"மஞ்சுளா! நந்தினி வந்துட்டா பாரு! முதல்ல அவளுக்கு காஃபியும் அப்புறம் சாப்பிட டிஃபனும் கொடு! சரியா சாப்பிட்டாளோ என்னவோ"

சிலநாட்களாக அன்றாட அரசியல் வாழ்க்கையை விட்டு சோகமே கதியென்று இருந்த தென்னரசுவிற்கு பழைய தெம்பும் குதூகலமும் திரும்பிவிட்டிருந்தது!

சக்தியை அடிக்க தனது ஆட்களையே ஏவியது என்றும் ஒரே வாரத்தில் அலைந்து திரிந்து கண்டு பிடித்து தனது தங்கையின் முன்னர் கொண்டு வந்து நிறுத்தினார்.

"இதோ இவந்தான்ம்மா எல்லாத்துக்கும் காரணம்! போன உள்ளாட்சித் தேர்தல்ல இவனுக்கு சீட் கொடுக்கலைன்னு வன்மம் வெச்சிருந்து நேரம் பார்த்து விளையாண்டிருக்கான்! ராஸ்கல்"

அண்ணன் தங்கைக்கு இடையில் முன்பு இருந்ததை விட இப்போது பாசம் அதிகரித்திருந்தது! சிறிய இடைவெளி இருவருக்குள்ளும் நிறைய புரிதல்களை
ஏற்படுத்தி விட்டிருந்தது!

நந்தினியும் தனது பின்னணி நிஜங்களை ஓரளவு அறிந்துகொண்டிருந்தாள்! அன்று சக்தி மட்டும் நிஜங்களைச் சொல்லாமல் இருந்திருந்தால் தான் எவ்வளவு நன்றி கெட்டவளாகி விட்டிருக்கக் கூடும் என்று தனக்குத்தானே வெட்கப் பட்டாள்!

இந்த வசதியான வாழ்க்கை, சொகுசு பங்களா, கார்.. இப்படி யாவுமே தனக்கு உரிமையானதல்ல எனினும் தன் அண்ணன் தென்னரசு அப்படி ஒரு எண்ணமே வராமல் தன்னை வளர்த்து வந்த விதம் பற்றியும் எண்ணி எண்ணிக் குமைந்துகொண்டிருந்தாள்!

தென்னரசுவின் பாதங்களில் விழுந்து கண்ணீரால் கழுவ அவள் துடித்தாளும் இவளுக்கும் விஷயம் தெரிந்துவிட்டதென்று தெரிந்தால் தென்னரசு வருத்தமடையக் கூடும் என்றும் சக்தி சொல்லியிருந்த படியாள் தனக்குத் தெரிந்தவாறு காட்டிக் கொள்ளவில்லை!

5 வயதில் திருவிழாப் பண்டிகையில் பெற்றோரைத் தொலைத்துவிட்ட இவளை தென்னரசுவின் பெற்றோர்தான் எடுத்து வந்து வளர்த்தன்ர். அப்போது தென்னரசுவிற்கு 13 வயது! அழுதபடி நின்றிருந்த நந்தினியை தென்னரசுதான் அவனது தந்தைக்கு சுட்டிக் காட்டினான்.

அப்போது முதல் தனது தங்கை தனது தங்கை என்று பாசத்தைக் கொட்டிவந்தான்! அவனது திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே அவனது பெற்றோர்களும் கார் விபத்தில் பலியாகிவிட நாந்தினிக்கு தென்னரசுவே எல்லாமுமாகிப் போனான்.

நந்தினிகு ஒரு திருமணத்தை முடித்து வைத்த பின்னரே தான் குழந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அதைத் தனது மனைவி மஞ்சுளாவிடமும் கூறி புரியவைத்து சம்மதிக்க வைத்திருந்தான்!

"மஞ்சுளா! நந்தினிக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணி வெச்சிடணும்னு நினைக்கிறேன்! நீ என்ன சொல்றே"

"பண்ணிடலாம்ங்க! சீக்கிரமே உங்களுக்குத் தெரிஞ்ச வகையில சொல்லி வைங்க! ஏதாவது மினிஸ்டரோட பையனுக்கே கூட பொண்ணு கேட்டு வருவாங்க"

"மினிஸ்டரெல்லாம் எதுக்குடி! நந்தினியே ஒரு பையனை மனசுக்குள்ளே முடிவு பண்ணி வெச்சிருக்கா! அப்புறம் பிரைம் மினிஸ்டரே வந்தாலும் நான் சம்மதிக்க மாட்டேன்! அவ சந்தோஷம்தான் என் சந்தோஷம்னு உனக்குத் தெரியும்ல!"

அதற்கு மேல் மஞ்சுளா ஒன்றும் பேசாமல் அமைதியாகி விட்டாள்!

-- தொடரும்...
Author: நாமக்கல் சிபி
•7/12/2008 10:34:00 am
கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து சென்றவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன்! எனது கைகளில் நானவளுக்கெழுதிய கடிதங்களும் நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும்!

ஒன்றும் செய்யத் தோன்றாது விரக்தியுற்ற நிலையில் அப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்! பேரர் வந்து அருகில் நின்று "க்கும்" என்று சன்னமாய்க் கணைத்து தன் இருப்பை உணர்த்தினான். நூறு ரூபாய்த் தாளொன்றை அவன் கையில் திணித்துவிட்டு மீதம் வாங்கவேண்டும் என்ற பிரக்ஞை கூட இல்லாமல் மேசையினின்று எழுந்தேன்!

வெறும் காகிதங்களாகிப் போன கடிதங்களை இனி என்ன செய்வது? மொத்தமாய்க் கிழித்து ஓரமாய் இருத்த குப்பைக் கூடையில் சேர்த்தேன்!
16 தளங்கள் கீழிறங்கிச் செல்லவேண்டும்! லிஃப்ட்டினுள் நுழைந்து கதவைச் சாத்தினேன்! அரை நொடிப் பொழுது இடைவெளியில் இன்னொருவனும் உள்ளே நுழைந்து கொண்டான்! லிஃப்டினுள் நாங்கள் இருவர் மட்டுமே!

மௌனமாய் இருந்த என்னைப் பார்த்து சிரித்தான்! அப்போதுதான் கவனித்தேன்! அவன் தனது தலையை வழுவழுவென்று மொட்டையடித்திருந்தான்! நீல ஜீன்சும் கருப்பு டிஷர்ட்டும் அணிந்திருந்தான்!

அவனே பேசத் தொடங்கினான்.

"இனிமே என்னை மறந்துடுன்னு சொல்லி இருப்பாளே! நமக்கு சேர்ந்து வாழக் கொடுப்பினை இல்லை! இனிமே நீ யாரோ நான் யாரோன்னும் சொல்லி இருப்பாளே! என் அப்பாவும் அம்மாவும் தூக்குல தொங்குறதை என்னால நினைச்சிக் கூடப் பார்க்க முடியலைன்னும் சொல்லி இருப்பா!"

மௌனமாய் அவனை ஆமோதித்தேன்!

"கொன்னுடு! அவளைக் கொன்னுடு!" என்றான்.

திடுக்கிட்டு நிமிர்ந்தேன்!

இப்போது நெருங்கி வந்து தோள்களைத் தொட்டான்!
"நண்பா! இந்த மாதிரி காதலிச்சிட்டு கடைசில கழுத்தறுத்துட்டுப் போறவளுக எல்லாம் இந்த உலகத்துல இருக்கணுமா என்ன? இந்தா துப்பாக்கி! சுட்டுக் கொன்னுடு" என்று தன் ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்த பிஸ்டலை எடுத்துக் கொடுதுவிட்டு விகாரமாய் இளித்தான்!

"ட்டுமீல்.. ட்டுமீல்.." லிஃப்டின் சுவர்களில் துப்பாக்கி வெடித்த சத்தம் எதிரொலித்தது!

"ஏண்டா இப்படி அலையுறீங்க! ஏதோ சில காரணங்களால சேர்ந்து வாழ முடியலைன்னு சொல்லி அழுதுட்டுப் போறா! நம்மால முடியலைன்னாலும் அவங்களாவது எங்கியாவது சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டுமேன்னு இல்லாம ஏண்டா பழி வாங்கணும்னு நினைக்கிறீங்க!" என்று கத்திவிட்டு துப்பாக்கியை அவன் மீதே எறிந்துவிட்டு விஃப்டை விட்டு வெளியேறி வாசலை அடைந்தேன்.

கைகாட்டி அழைக்கவும் அருகில் வந்து நின்ற டாஸி டிரைவரிடம்

"போலீஸ் ஸ்டேஷன் போப்பா" என்று கூறிவிட்டு ஏறி அமர்ந்தேன்!

பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!